டில்லி பறந்தார் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அவசர அழைப்பு! எதிர் கோஷ்டியினர் புகார் குறித்து விசாரணை?
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா. இவர், காங்கிரசுடன் உள் ஒப்பந்த அரசியல் செய்வதாக பா.ஜ., மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறினார். எத்னால் தலைமையில் விஜயேந்திராவுக்கு எதிராக ஒரு அணி உருவாகி உள்ளது.அந்த அணியினர், விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து, மாற்றியே தீர வேண்டும் என்பதில் குறிக்கோளாக உள்ளனர். தங்களுக்கு தெரிந்த மத்திய அமைச்சர்கள் மூலம், மேலிடத்தை தொடர்பு கொள்ளவும் முயற்சி செய்தனர்.சமீபத்தில் டில்லி சென்ற அதிருப்தி அணியினர், கட்சியின் தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷ், மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து பேசிவிட்டு கர்நாடகா திரும்பினர். ஆனால், மேலிட தலைவர்கள் தன் பக்கம் உள்ளதாகவும், தலைவராக நீடிப்பேன் என்றும் விஜயேந்திரா கூறி வருகிறார். ஆனாலும் அதிருப்தி அணி, 'மாநில தலைவர் மாற்றம் உறுதி' என்று கூறி வருகிறது. டில்லி வெற்றி
இந்நிலையில், டில்லி சட்டசபை தேர்தல் முடிந்ததும், கர்நாடகா பிரச்னையில் மேலிட தலைவர்கள் தலையிடுவர் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி டில்லி தேர்தல் முடிந்து, 27 ஆண்டுகளுக்கு பின், பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதனால், மேலிடம் உற்சாகம் அடைந்து உள்ளது. இந்த கையோடு, கர்நாடகாவில் நிலவும் பிரச்னைகளுக்கும், ஒரு முடிவு கட்டி விடலாம் என்று மேலிடம் நினைக்கிறது. இதையடுத்து, உடனே டில்லி வரும்படி விஜயேந்திராவுக்கு, மேலிடத்திடம் இருந்து நேற்று மதியம் அவசர அழைப்பு வந்தது. அப்போது அவர் தாவணகெரேயில் நடந்த எஸ்.டி., சமூக மாநாட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.மேலிடம் அழைத்ததால், தாவணகெரேயில் இருந்து பெங்களூருக்கு திரும்பினார். நேற்று மாலை டில்லி பறந்தார். இன்று மேலிட தலைவர்களை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. தக்க பதில்
இதற்கிடையில், 'மேலிடத்திடம் இருந்து விஜயேந்திராவுக்கு அழைப்பு வரவில்லை. டில்லியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று உள்ளார்' என்று அவரது ஆதரவாளர்கள் கூறினர். ஆனாலும், இன்று மேலிட தலைவர்களை, விஜயேந்திரா சந்திக்கிறார்.அப்போது, அவரிடம், 'கர்நாடக பா.ஜ.,வில் என்ன நடக்கிறது. எதிர் கோஷ்டியினர் உங்கள் மீது அளிக்கும் புகாருக்கு என்ன சொல்ல போகிறீர்கள்' என்று, விஜயேந்திராவிடம் விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது. இதற்கு எல்லாம் தக்க பதிலுடன் அவர் டில்லிக்கு சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலிட தலைவர்களிடம் என்ன பிரச்னை என்று விரிவாக விளக்கம் அளித்து விட்டு, எத்னால் அணியினரை பற்றி மேலிட தலைவர்களிடம், 'போட்டு' கொடுக்கும் முனைப்பிலும் விஜயேந்திரா இருப்பதாக சொல்லப்படுகிறது.அவர் டில்லியில் இருந்து திரும்பிய பின், தலைவர் பதவியில் மாற்றம் நடக்குமா அல்லது எத்னால் அணி மீது, கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா என்பதும் தெரிந்து விடும். இதற்கிடையில், மாவட்ட பா.ஜ., தலைவர்களை தனக்கு ஆதரவாக செயல்பட வைக்கும் முயற்சியிலும், விஜயேந்திரா டீம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால், வரும் நாட்களில் பா.ஜ.,வில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.