மைசூரில் சாலைக்கு முதல்வர் பெயர் பா.ஜ., திடீர் ஆதரவு - ம.ஜ.த., எதிர்ப்பு
மைசூரு: மைசூரின் முக்கிய சாலைக்கு, முதல்வர் சித்தராமையாவின் பெயர் சூட்ட மைசூரு மாநகராட்சி முற்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மைசூரு நகரின் இதயப் பகுதியில் உள்ள ஒன்டி கொப்பல் லட்சுமி வெங்கடேஸ்வரா கோவிலில் இருந்து, ராயல் இன் ஹோட்டல் வரையிலான சாலைக்கு, முதல்வர் சித்தராமையாவின் பெயர் சூட்ட, மைசூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, மக்களிடம் கருத்து கேட்டிருந்தது. இதற்கு ம.ஜ.த., எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா, சுற்றுச்சூழல் ஆர்வலர் பானு மோகன் உட்பட பலரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.தற்போது இந்த சாலை, மைசூரின் வளர்ச்சிக்காக பாடுபட்ட நால்வடி கிருஷ்ண ராஜ உடையாரின் சகோதரி இளவரசி கிருஷ்ணஜ்ஜம்மணி பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் இவரது பெயரில் கிருஷ்ண தத்த உடையார் மருத்துவமனை கட்டினார். எனவே அந்த பெயரிலேயே இருக்கட்டும்; மாற்றக் கூடாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.ஆனால், இதை பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா ஆதரித்துள்ளார்.இதுகுறித்து, மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:முதல்வர் சித்தராமையா இரண்டு முறை மாநில முதல்வராக இருந்தவர். மைசூருக்கு இவரது பங்களிப்பு அதிகம். அவரை காங்கிரசுடன் முடக்கி விடக்கூடாது. இவரது பெயரை மைசூரின் சாலைக்கு சூட்டுவதில் தவறு அல்ல. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.மைசூரு மாநகராட்சி ஆலோசனைக்கு, காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., என யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க கூடாது. சாலைகளுக்கு கவிஞர்கள், சாதனையாளர்களின் பெயரை சூட்டுவது சகஜம்தான். கிருஷ்ண ராஜ உடையார், சாமராஜ உடையார் பெயர்கள், திவான்களின் பெயர்களையும் வைத்துள்ளனர்.மைசூரில் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை கட்டியதில், சித்தராமையா, முன்னாள் எம்எல்.ஏ., வாசண்ணாவின் பங்களிப்பு அதிகம். 40 ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர் சித்தராமையா. சாதனையாளர்களை அடையாளம் காணும் விஷயத்தில், அரசியல் செய்ய கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ம.ஜ.த., கூறியிருப்பதாவது:மைசூரு நகரின் முக்கியமான சாலைக்கு, ஊழல் குற்றச்சாட்டை சுமந்த சித்தராமையாவின் பெயரை சூட்டுவது பெருங்குற்றம். 'முடா' முறைகேட்டில் இவரே முதல் குற்றவாளியாக இருக்கிறார். இவரது பெயரை சாலைக்கு சூட்டும் மைசூரு மாநகராட்சி ஆலோசனை கண்டிக்கத்தக்கது.முதல்வர் சித்தராமையா, லோக் ஆயுக்தா மற்றும் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இவரது பெயரை சாலைக்கு வைப்பது மாநிலத்துக்கு செய்யும் துரோகம், அவமதிப்பு. முடா முறைகேட்டை இன்னும் மக்கள் மறக்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.