| ADDED : மார் 18, 2024 06:09 AM
பெங்களூரு : ''ஆர்.எஸ்.எஸ்.,சின் அரசியல் சட்டத்தை அமல்படுத்துவதே பா.ஜ.,வின் லட்சியம்,'' என ஆம் ஆத்மி மாநில தலைவர் 'முக்கிய மந்திரி' சந்துரு தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:வளர்ச்சியை விட வகுப்புவாதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் சர்வாதிகாரியாக பா.ஜ., விளங்குகிறது. அக்கட்சியை தோற்கடிக்க ஆம் ஆத்மி, 'இண்டியா' கூட்டணியில் உள்ளது.மதத்தின் பெயரால் தேர்தலை பா.ஜ., சந்திக்கிறது. தொழிலதிபர்கள், ஊழல்வாதிகள் அமலாக்க இயக்குனரகத்தால் அச்சுறுத்தப்பட்டு, தேர்தல் பத்திரங்களை வாங்குமாறு அழுத்தம் கொடுத்து உள்ளனர். ஹிட்லரை விட மோசமான சர்வாதிகார ஆட்சியை பா.ஜ., கொடுத்துள்ளது.விவசாயிகளுக்கு வட்டி சலுகை அளிக்காமல், தொழில் முனைவோரின் பல லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை, அரசு தள்ளுபடி செய்திருப்பது வெட்கக்கேடானது. பா.ஜ., தலைவர்கள் உலக குருவாக மாறுவதற்கு முன், மனிதர்களாக மாற வேண்டும்.அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் என்று பேசிய அனந்த குமார் ஹெக்டே மீது பா.ஜ., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அம்பேத்கரின் அரசியல் அமைப்புக்கு பதிலாக, ஆர்.எஸ்.எஸ்.,சின் அரசியல் சட்டத்தை அமல்படுத்துவதே அக்கட்சியின் லட்சியம்.குடும்ப அரசியலை விமர்சிக்கும் பா.ஜ., தலைவர்கள், எடியூரப்பா குடும்பத்தை மாநிலத்தில் அனுமதித்துள்ளனர். இங்கு பல தலைவர்களின் பிள்ளைகள், தேர்தலில் போட்டியிட முயற்சிக்கின்றனர். குடும்பத்துக்கு சொந்தமான ம.ஜ.த.,வுடன் கை கோர்த்துள்ளனர். இது மோடியின் கவனத்துக்கு செல்லவில்லையா.இவ்வாறு அவர் கூறினார்.