பெங்களூரு : ரிசார்ட்டில் தங்கும் வகையில், கூடுதல் ஆடைகளை எடுத்து வாருங்கள் என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.ராஜ்யசபா தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. கர்நாடகாவில் இருந்து நான்கு பேர், எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். காங்கிரஸ் மூன்று வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.பா.ஜ., கூட்டணியால் ஒரு இடத்தில், வெற்றி பெற முடியும் என்ற நிலையில், இரண்டு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி ஓட்டு போடுவரோ என்ற பீதி, அக்கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.இதனால் எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளனர். வரும் 26ம் தேதி மதியம் 12:00 மணிக்கு, பெங்களூரில் உள்ள ஹோட்டலில், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்னர் மாலை 3:30 மணிக்கு, முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது. அதன்பின்னர் எம்.எல்.ஏ.,க்கள் ரிசார்ட் அழைத்து செல்லப்பட உள்ளனர். வரும் 27ம் தேதி காலை ரிசார்ட்டில் இருந்து, பஸ்களில் அழைத்து வரப்பட உள்ளனர். இதனால் கூடுதலாக ஆடைகள் எடுத்து வரும்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.