இடைத்தேர்தல் முடிவுகள்: ஆளுங்கட்சிகள் அபாரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் - 9; ராஜஸ்தானில் - 7; மேற்கு வங்கத்தில் - 6; அசாமில் - 5; பஞ்சாப், பீஹாரில் தலா - 4; கர்நாடகாவில் - 3; மத்திய பிரதேசம், கேரளாவில் தலா - 2; சத்தீஸ்கர், குஜராத், உத்தரகண்ட் மற்றும் மேகாலயாவில் தலா - 1 என, 46 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.பஞ்சாபில் நான்கு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி மூன்றில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியை காங்., கைப்பற்றியது. ஆறு தொகுதிகள்
ராஜஸ்தானில் ஏழு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், ஐந்தில் ஆளுங்கட்சியான பா.ஜ., வென்றது. பாரத் ஆதிவாசி கட்சி ஒரு தொகுதியிலும், காங்., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. பீஹாரில் நான்கு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், அனைத்து இடங்களையும், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி கைப்பற்றியது. மேகாலயாவில் காம்பேக்ரே தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த முதல்வர் கன்ராட் சங்மாவின் மனைவி மெஹ்தாப் சண்டி அகிடோக் சங்மா வெற்றி பெற்றார்.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில், ஒன்பது தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஆறு தொகுதிகளை பா.ஜ., வென்ற நிலையில், கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இரு தொகுதிகளை சமாஜ்வாதி கைப்பற்றியது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில், நைஹாட்டி, சீதை, ஹரோவா உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அனைத்தையும் ஆளுங்கட்சி கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த மூன்று தொகுதிகளையும் காங்., கைப்பற்றியது. சென்னபட்டணா தொகுதியில் போட்டியிட்ட, மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில், காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். முன்னணி
கேரளாவின் பாலக்காடு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. சேலக்கரா தொகுதியை ஆளும் இடது ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. ம.பி.,யில் இரு தொகுதி களில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்., - பா.ஜ., தலா ஒரு தொகுதியில் வென்றன.சத்தீஸ்கரின் ராய்ப்பூர் சிட்டி சவுத் தொகுதி இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான பா.ஜ., வென்றது. குஜராத்தின் வாவ் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளும் கட்சியான பா.ஜ., வெற்றி பெற்றது.