மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா-கனடா உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சியடைவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது, கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது; இருநாடுகளின் பிரதமர்கள் மற்றும் மக்களின் நலன்களை பூர்த்தி செய்யும் விதமாக, இந்தியா - கனடா நாடுகளின் ஒத்துழைப்பை மீண்டும் கட்டமைக்க வேண்டும். வணிகம், முதலீடு, வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, ஏஐ, முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன, என்றார். கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பேசியதாவது; நமஸ்தே, இன்று எங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு மிக்க நன்றி. இன்று இந்தியா - கனடா உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கனஸ்கிஸில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை வரவேற்றதில் பிரதமர் கார்னி மகிழ்ச்சியடைந்தார். அந்த சாதகமான நிகழ்வே, இன்று நாம் இங்கு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.இந்தியா-கனடா கூட்டு அறிக்கையைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம். இது முழுமையானதாகவும், பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. இந்த கூட்டு அறிக்கை இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான பரஸ்பர திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நமது பரஸ்பர முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். சில வாரங்களுக்கு முன்பு இங்கு பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பாக எங்கள் அதிகாரிகள் நடத்திய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்தப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இருநாடுகளும் உணர்ந்துள்ளன, எனக் குறிப்பிட்டார்.