| ADDED : ஜன 06, 2024 07:03 AM
மாண்டியா: மை ஷுகர் தொழிற்சாலையில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் தலைவர் நாக ராஜப்பா மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த அரசு முடிவுசெய்துள்ளது.மாண்டியாவில் உள்ள மை ஷுகர் சர்க்கரை ஆலை, கர்நாடக அரசு சார்ந்த ஒரே தொழிற்சாலை. 2008ல் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, நாக ராஜப்பா மை ஷுகர் சர்க்கரை ஆலை தலைவராக இருந்தார். இவர் எடியூரப்பாவின் உறவினர்.நாகராஜப்பா பதவியில் இருந்தபோது, புதிய மில் வாங்குவது, சர்க்கரை விற்பனை உட்பட, பல விதங்களில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, அன்றைய சதானந்த கவுடா அரசு, லோக் ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிட்டது. லோக் ஆயுக்தா விசாரணையில், நாக ராஜப்பா ஊழல் செய்திருப்பது, வெளிச்சத்துக்கு வந்தது.இவரால் மை ஷுகர் சர்க்கரை ஆலைக்கு, 121 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை இவரிடமே வசூலித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி, லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அன்றைய அரசு, நடவடிக்கை எடுக்க தயங்கியது.தற்போதைய காங்கிரஸ் அரசு, நாகராஜப்பா மீது கிரிமினல் வழக்கு செய்ய முடிவு செய்துள்ளது. நஷ்ட தொகையை அவரிடம் இருந்து வசூலிக்கவும், நடவடிக்கை எடுத்து வருகிறது.