உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தயாநிதியிடம் சி.பி.ஐ., விரைவில் விசாரணை:வழக்கு பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்?

தயாநிதியிடம் சி.பி.ஐ., விரைவில் விசாரணை:வழக்கு பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்?

புதுடில்லி:மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்கும்படி, அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரனை கட்டாயப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் தயா நிதியிடம், சி.பி.ஐ., விரைவில் விசாரணை நடத்தும் என, தகவல் வெளியாகியுள்ளது.பி.டி.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2008-09ல் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 2001-07ம் காலகட்டங்களில் நடந்த ஒதுக்கீடு குறித்தும் முழுமையாக விசாரிக்கும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ., இறங்கியுள்ளது. இந்த காலங்களில், அருண் ஷோரி, பிரமோத் மகாஜன், தயாநிதி ஆகியோர், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தனர். பிரமோத் மகாஜன் இறந்துவிட்ட நிலையில், அருண் ஷோரியிடம், கடந்த பிப்ரவரி 25ல், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவரது பதவிக் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகள் குறித்து, அருண் ஷோரி, சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார். இருந்தாலும், இவர் மீது தவறு இருப்பதாக, சி.பி.ஐ., சார்பில், தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அடுத்தபடியாக, தயாநிதியிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ., அதிகாரிகள் துவக்கி யுள்ளனர்.மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்கும்படி, தயாநிதி கட்டாயப்படுத்தியதாக, அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன், சி.பி.ஐ.,யில் புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ., அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, நடந்த விவரத்தை விளக்கியிருந்தார். தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த காலகட்டத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விரைவில் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் நடந்த, மேக்சிஸ் - ஏர்செல் இடையேயான விவகாரம் குறித்தும், சிவசங்கரன் தெரிவித்த புகார் அடிப்படையில், முக்கிய விசாரணை இருக்கும் என தெரிகிறது.மேலும், தயாநிதியின் பதவிக்காலத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடக்கவுள்ளது.வழக்கு பதிவு செய்வதற்கு முன், இதுகுறித்து, சி.பி.ஐ., முன் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு, தயாநிதிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், தகவல்கள் கூறுகின்றன.சி.பி.ஐ., வட்டாரங்கள், இதுகுறித்து மேலும் கூறுகையில்,'மாறன் குடும்பத்துக்கு சொந்தமான, 'சன் டிவி' குழுமத்திற்கும், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடந்த நிதிப் பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்றன.இவ்வாறு, பி.டி.ஐ., செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை