பெங்களூரு: 'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவை, டிசம்பர் 10ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால், முதல்வர் சித்தராமையாவுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது. 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், பயனாளிகளுக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது. இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தேசாய் தலைமையில் விசாரணை நடக்கிறது. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, முடாவில் இருந்து மனைவி பார்வதிக்கு, முதல்வர் 14 வீட்டு மனைகள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. லோக் ஆயுக்தா
முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், மைசூரு லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி முதல்வர், அவரது மனைவி பார்வதி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவானது. இவர்கள் நான்கு பேரிடமும் லோக் ஆயுக்தா போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், 'லோக் ஆயுக்தா சரியாக விசாரணை நடத்தவில்லை' என, முதல்வர் மீது புகார் அளித்த சினேகமயி கிருஷ்ணா குற்றச்சாட்டு கூறினார். முடா வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்திலும் மனு செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நேற்று நீதிபதி நாக பிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நில உரிமையாளரான தேவராஜ் தரப்பில் ஆஜரான வக்கீல் துஷ்யந்த் வாதாடுகையில், ''முடா வழக்கில் முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதிக்கு எதிராக, முதல்வர் தரப்பு தாக்கல் செய்த மனு இங்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேவராஜ் மேல்முறையீடு செய்துள்ளார். ''அந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கிறது. இதனால் விசாரணையை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்க உத்தரவிட கோரிய மனுவையும் ஒத்திவைக்க வேண்டும். டிசம்பர் 9ம் தேதிக்கு பிறகு எந்த நாளிலும் இந்த மனுவை விசாரிக்கலாம்,'' என்று கூறினார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ராகவன் வாதாடுகையில், ''மேல் முறையீட்டு மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த மனுவையும் ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை,'' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகபிரசன்னா, ''மனு மீதான விசாரணையை டிசம்பர் 10ம் தேதிக்கு திட்டமிடலாமா,'' என்று கேட்டார். என்ன பயன்?
மனுதாரர் தரப்பு வக்கீல் ராகவன், ''இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய, லோக் ஆயுக்தா போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.இதற்கு பதிலளித்த நீதிபதி, ''மனு மீது இன்று எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அப்படி இருக்கும்போது அறிக்கை தாக்கல் செய்து என்ன பயன். ''அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடுகிறேன். அடுத்த விசாரணை டிசம்பர் 10ம் தேதி மதியம் 2:30 மணிக்கு நடக்கும்,'' என தெரிவித்தார். எந்த நேரமும்...
முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், சி.பி.ஐ., விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் சித்தராமையா இருந்தார். ஆனால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதன் வாயிலாக, அவருக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.முடா முறைகேடு தொடர்பான ஆவணங்களை நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் திருடி சென்று விட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.சி.பி.ஐ., விசாரணை நடந்தால் பைரதி சுரேஷுக்கும் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. தற்போது அவருக்கும் தற்காலிக நிம்மதி கிடைத்திருக்கிறது.