பாக்., மீண்டும் தாக்குதல் மத்திய அரசு எச்சரிக்கை
நேற்று மாலை போர் நிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், இரவு 9:00 மணி முதல், ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். ட்ரோன் தாக்குதலும் நடத்தப்பட்டது. பாரமுல்லா, உதம்பூர், கதுவா மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அப்பகுதிகள் இருளில் மூழ்கின. ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, அங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாக்., அத்துமீறல் குறித்து நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று இரவு கூறியதாவது: இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்ட நிலையில், பாகிஸ்தான் அதை மீறியுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக எல்லை பகுதியில் பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டியது அதன் பொறுப்பு. உரிய நடவடிக்கை எடுக்கும்படி பாக்., அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், உரிய பதிலடி கொடுக்க, நம் படைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதுதான் போர் நிறுத்தமா?
போர் நிறுத்த அறிவிப்பை மீறி, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஸ்ரீநகரில் பல இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்கின்றன. ஸ்ரீநகரை குறிவைத்து வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதுதான் போர் நிறுத்தமா' என கேள்வி எழுப்பியுள்ளார்.