நிலவுக்கு சென்று திரும்பும் சந்திரயான் - 4 அமைச்சரவை பச்சைக்கொடி
புதுடில்லி,வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட, 'சந்திரயான் - 3' திட்டத்தை தொடர்ந்து, நிலவில் இந்திய விண்வெளி வீரர்கள் தரையிறங்குவதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி, அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வர, 'சந்திரயான்- - 4' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், 2023 ஜூலை 14ல், சந்திரயான் - 3 விண்கலத்தை ஏவியது. இது வெற்றிகரமாக, ஆக., 23ல் தரையிறங்கி சாதனை படைத்தது. நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு மற்றும் தென்பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை நம் நாடு பெற்றது. விண்வெளித் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடி அரசு உறுதுணையாக இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சந்திரயான் - 4, ககன்யான், இந்திய விண்வெளி நிலையம், வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் திட்டம் உள்ளிட்ட முக்கிய விண்வெளி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மறுசுழற்சி விண்கலம்
மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், குறைந்த செலவிலான, என்.ஜி.எல்.வி., எனப்படும், அடுத்த தலைமுறைக்கான விண்கலத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, 8,240 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள, எல்.வி.எம்., -- 3 உடன் ஒப்பிடும் போது, என்.ஜி.எல்.வி., பேலோடு திறன், 3 மடங்கு அதிகம். விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கட்டமைப்பிலும், 2040-ல் இந்திய குழுவினர் நிலவில் தரையிறங்கும் திட்டத்துக்கும் முக்கிய பங்களிப்பை, என்.ஜி.எல்.வி., அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளி கிரகம்
பூமிக்கு மிக அருகே உள்ள வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 'வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்' என்ற பெயரில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், வெள்ளி கிரகத்தில் சுற்றுச்சுழல், வளிமண்டலம், நிலப்பரப்பு, சூரியனின் தாக்கம் ஆகியவை குறித்து தெளிவான புரிதல்களை வழங்க வழிவகை செய்யும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு, 1,236 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், விண்கலத்தை தயார் செய்ய, 824 கோடி ரூபாயை, இஸ்ரோ செலவழிக்கும்.
விண்வெளி நிலையம்
ககன்யான் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், பாரதிய விண்வெளி நிலையத்தின் முதல் பிரிவை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாரதிய விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை மேம்படுத்தவும், கட்டமைப்பதற்கும், இயக்குவதற்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் செய்து சரிபார்க்கும் இயக்கங்களை மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தில் திருத்தம், பாரதிய விண்வெளி நிலையத்திற்கான வளர்ச்சி மற்றும் முன்னோடி இயக்கங்களின் நோக்கத்தை உள்ளடக்கியது. தற்போது தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயல்விளக்கத்தின் மனித விண்வெளி பயணத் திட்டம், எட்டு பயணங்கள் வாயிலாக, பாரதிய விண்வெளி நிலையத்தின் முதல் பிரிவு, 2028 டிசம்பருக்குள் முடிக்கப்பட உள்ளது. கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ககன்யான் திட்டம், மனிதர்களை குறைந்த புவி வட்டப்பாதைக்கு அனுப்பவும், நீண்டகால அடிப்படையில் இந்திய மனித விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களுக்கு அடித்தளம் அமைக்கவும் வகை செய்கிறது. வரும் 2035-க்குள் செயல்படும் வகையில் பாரதிய விண்வெளி நிலையத்தை உருவாக்குவது, 2040-க்குள் இந்திய விண்வெளி இயக்கத்தை உருவாக்குவது என்பது, அமிர்த காலத்தில் விண்வெளிக்கான தொலைநோக்கு பார்வையில் அடங்கும்.
ககன்யான்
இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவு திட்டமான 'ககன்யான்' திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக, 11,170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ககன்யான் திட்டத்துக்காக மொத்தம் 20,193 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சந்திரயான் - 4
சந்திரயான் - -3 திட்டத்தை தொடர்ந்து, அடுத்த முயற்சியாக, சந்திரயான் - -4 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்று ஆய்வு செய்வதுடன், நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்து, பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதை, 2040க்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு, 2,104.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் - 4 திட்டத்துக்கான விண்கலம் மற்றும் ஏவுதல் பொறுப்பு, 'இஸ்ரோ'விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டில் கவனம் செலுத்துவதோடு, மனிதர்களை ஏற்றிச் செல்லும் பணிகள் மற்றும் நிலவு ஆய்வில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.