மேலும் செய்திகள்
துங்கபத்ரா அணை நீர்மட்டம் 12 டி.எம்.சி., உயர்வு
24-Aug-2024
கொப்பால்: தொடர் கனமழையால் நிரம்பிய துங்கபத்ரா அணையில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் நேற்று சமர்ப்பண பூஜை செய்தனர்.கொப்பால் - விஜயநகரா மாவட்ட எல்லையில் முனிராபாத்தில் துங்கபத்ரா அணை உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணை வேகமாக நிரம்பியது. கடந்த மாதம் இந்த அணையில், முதல்வர் சித்தராமையா சமர்ப்பண பூஜை செய்ய இருந்தார். ஆனால் கடந்த மாதம் 10ம் தேதி இரவு, அணையின் 19வது மதகின் ஷட்டர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. ஷட்டர் இல்லாத மதகில் இருந்து, அதிக தண்ணீர் வெளியேறியது. அணையின் பாதுகாப்பு கருதி, மேலும் சில மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆறு நாட்கள் போராட்டத்திற்கு பின், புதிய ஷட்டர் பொருத்தப்பட்டது. அணையில் இருந்து 35 டி.எம்.சி., கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கவுரவிப்பு
கடந்த மாதம் 13ம் தேதி அணையை முதல்வர் சித்தராமையா பார்வையிட்டார். 'விவசாயிகள் யாரும் ஆதங்கப்பட வேண்டாம். அணை மீண்டும் நிரம்பும். நான் சமர்ப்பண பூஜை செய்வேன்' என்று கூறி இருந்தார். அதன்படி மீண்டும் பெய்த கனமழையால், அணை நிரம்பியது. இந்நிலையில் அணையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் நேற்று, சமர்ப்பண பூஜை செய்தனர்.வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான், பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் சிவராஜ் தங்கடகி, கொப்பால், விஜயநகரா, பல்லாரி, ராய்ச்சூர் மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். அணை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், புதிய ஷட்டரை நிறுவ இரவு, பகலாக உழைத்த ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். கவலை வேண்டாம்
பின், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:இரவு, பகலாக வேலை செய்து புதிய ஷட்டர் நிறுவிய ஊழியர்களுக்கு எனது சார்பிலும், விவசாயிகள் சார்பிலும் நன்றி தெரிவிக்கிறேன். ஷட்டர் உடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.ஒரே வாரத்தில் புதிய ஷட்டர் நிறுவி 20 டி.எம்.சி., தண்ணீரை சேமித்து கொடுத்த, இன்ஜினியர் கண்ணையா நாயுடு பணி பாராட்டுக்கு உரியது. இரண்டாம் சாகுபடிக்காக துங்கபத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறப்போம். விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்.நம் மாநிலத்தின் 9,26,438 ஏக்கர், ஆந்திராவின் 6,25,097 ஏக்கர், தெலுங்கானாவின் 87,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, துங்கபத்ரா அணை தண்ணீர் உயிர்நாடியாக உள்ளது. இரண்டாவது முறை அணை நிரம்பியது மகிழ்ச்சியான விஷயம்.எதிர்க்கட்சியினர் பேச்சை கேட்காதீர்கள். முன்பு ஒரு நாளைக்கு ஒரு முறை பா.ஜ., பொய் சொல்லியது. இப்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு பொய் சொல்கின்றனர். பொய் சொல்லி கொப்பால், பல்லாரி, விஜயநகரா, ராய்ச்சூர் மக்களை ஏமாற்ற முடியாது என்பது எனக்கு தெரியும்.கல்யாண கர்நாடகாவில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளிலும், காங்கிரசை மக்கள் வெற்றி பெற வைத்தனர். இதனால் கலபுரகியில் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தை நடத்தி, பல திட்டங்களை அறிவித்து உள்ளோம். கல்யாண கர்நாடகா வளர்ச்சிக்கு, எங்கள் அரசு 5,000 கோடி ரூபாய் நிதி அறிவித்து உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
கொப்பால் விமான நிலையத்தில், முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:அணையின் மதகு ஷட்டர்களை, 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆனால் துங்கபத்ரா அணை ஷட்டர்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் நன்றாக வேலை செய்கிறது. இதை மாற்றுவது குறித்து, நிபுணர் குழு அமைத்து உள்ளோம். அவர்கள் அறிக்கை அளித்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த 2013 முதல் 2018 வரை, எங்கள் கட்சி காலத்தில் மாநிலம் முழுதும் சாலைகள் அமைக்கப்பட்டன. பா.ஜ., ஆட்சியில் சாலைகள் அமைக்கவில்லை. அர்க்காவதி லே - அவுட் நில ஒதுக்கீடு குறித்து, அரசுக்கு, கவர்னர் கடிதம் எழுதி இருந்தால், அரசு கவனம் செலுத்தும். லோக் ஆயுக்தா அனுமதி கேட்டது பற்றி, அரசுக்கு எப்படி தெரியும் என தலைமை செயலருக்கு, கவர்னர் கடிதம் எழுதி உள்ளார். கவர்னர் அலுவலகத்தில் இருந்து கூட தகவல் கசிந்து இருக்கலாம். இதுபற்றி கவர்னர் விசாரிக்கட்டும்.மாடுகள் வளர்ப்பு செலவு அதிகரித்து இருப்பதால், பால் விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள், எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். பால் விலை உயர்த்தப்பட்டதால், அதன் முழுமையான பலன் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். நாங்கள் யாருக்கு எதிராகவும் வெறுப்பு அரசியல் செய்யவில்லை.எம்.எல்.ஏ., முனிரத்னா மீது மூன்று வழக்குகள் பதிவாகி உள்ளன. அமைச்சர்கள் என்னை சந்தித்து எஸ்.ஐ.டி., அமைக்க கோரிக்கை வைத்தனர். அதனால், எஸ்.ஐ.டி., அமைத்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
24-Aug-2024