புதுடில்லி: வெள்ளியை ஏற்றுமதி செய்வதற்கு சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதனால், சாதாரண உலோகம் என்பதில் இருந்து, அரியவகை கனிமங்கள் என்ற பிரிவில் வெள்ளியும் சேர்ந்துள்ளது. இது உலகளாவிய வெள்ளி வினியோக தொடரில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த அக்டோபரில் சீன வர்த்தகத்துறை அறிவித்த இந்த கட்டுப்பாடுகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. இதனால், வெள்ளியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. வெள்ளி ஏற்றுமதிக்கு ஒட்டுமொத்த தடை அறிவிக்கப்படா விட்டாலும், 44 நிறுவனங்களுக்கு மட்டும் ஏற்றுமதி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.இது, அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் ராணுவ தளவாட வினியோக தொடரில், பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் சீனப்பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் வரிக்கு பதிலடியாக, இந்நடவடிக்கை அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இதனால், சாதாரண பண்டகமாக வணிகமான நிலையில் இருந்து, அரிய வகை உலோகமாக வெள்ளியை தரம் உயர்த்தும் வகையில், சீனாவின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது.'இது நல்லதல்ல. வெள்ளி பல்வேறு தொழில் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் நடவடிக்கை பல பாதிப்புகளை ஏற்படுத்தும்'- எலான் மஸ்க்,டெஸ்லா சி.இ.ஓ.,* கடந்த 2025ல், ஜன., - நவம்பர் வரை சீனா, 4,600 டன் வெள்ளியை ஏற்றுமதி செய்துள்ளது* இதே காலத்தில், சீனா இறக்குமதி செய்த வெள்ளியின் அளவு 220 டன் மட்டுமே
இந்தியாவில் தாக்கம்?
வெள்ளி ஏற்றுமதி மீதான சீனாவின் இந்த கட்டுப்பாடுகள் அமலானதால், இந்தியாவுக்கு அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் வெள்ளியின் நிலையில் என்ன தாக்கம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மின்னணு பொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் முக்கிய பங்கு வகிக்கும் வெள்ளி இறக்குமதி மீது சீனாவின் புதிய கட்டுப்பாடு, பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்களை கவலையடைய செய்துள்ளது.
470% விலை உயர்வு
கடந்த 1979ம் ஆண்டில் இருந்து, வெள்ளி விலை, இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2025ல் 470 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 80 அமெரிக்க டாலரை தொட்டு, கடந்த புதனன்று ஒரு அவுன்ஸ் வெள்ளி, 73 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி இருந்தது.