உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  அருணாச்சல் பெண் பயணிக்கு துன்புறுத்தல் பாஸ்போர்ட் செல்லாது என அலைக்கழித்த சீனா

 அருணாச்சல் பெண் பயணிக்கு துன்புறுத்தல் பாஸ்போர்ட் செல்லாது என அலைக்கழித்த சீனா

புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில் பிறந்த பெண்ணின் இந்திய பாஸ்போர்ட்டை ஷாங்காய் விமான நிலையத்தில் பறித்து வைத்துக் கொண்ட சீன அதிகாரிகள், 'அருணாச்சல், சீனாவின் ஒரு பகுதி என்பதால் இந்த பாஸ்போர்ட் செல்லாது' எனக்கூறி, 18 மணி நேரம் அந்த பெண்ணை மிரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மத்திய அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதெல்லாம், இந்த விவகாரத்தில் இருந்து சீனா பின்வாங்குவது வாடிக்கையாகி வருகிறது. தொல்லை இந்நிலையில், அருணாச்சலில் பிறந்த பிரேமா தாங்டாக் என்பவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். பணி நிமித்தமாக தலைநகர் லண்டனில் இருந்து ஜப்பானுக்கு கடந்த 21ம் தேதி விமானத்தில் புறப்பட்டார். வழியில், 3 மணி நேர ஓய்வுக்காக சீனாவின் ஷாங்காய் நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போது குடியேற்ற கவுன்டரில் அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த சீன அதிகாரிகள், அது செல்லாது என தெரிவித்து உள்ளனர். அதிர்ச்சியடைந்த பிரேமா அதற்கான காரணத்தை கேட்ட போது, 'அருணாச்சல பிரதேசத்தில் பிறந்தது தான்' என கூறியுள்ளனர். மேலும், அந்த மாநிலம் சீனாவின் ஓர் அங்கம் எனவும் தெரிவித்துள்ளனர். கடந்த முறை ஷாங்காய் வழியாக சென்றபோது இப்படியொரு பிரச்னையை யாரும் எழுப்பவில்லை என பிரேமா கூறியுள்ளார். லண்டனில் உள்ள சீன துாதரகமும், ஷாங்காய் வழியாக இந்தியர்கள் வேறு நாடுகளுக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை என குடியேற்ற அதிகாரிகளுக்கு உறுதிப்படுத்தியது. இருப்பினும், பிரேமாவை ஜப்பான் செல்லவிடாமல், 18 மணி நேரமாக தடுத்து நிறுத்தி சீன அதிகாரிகள் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால், ஜப்பான் விமானத்தை அவர் தவறவிட்டு பெரும் இன்னலுக்கு ஆளானார். கேலி இது குறித்து பிரேமா கூறியதாவது: குடியேற்ற பரிசோதனைக்காக என் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு காத்திருந்தேன். அப்போது, 'இந்தியா, இந்தியா' என கத்திக் கொண்டே வந்த சீன அதிகாரிகள், என்னை தனியே அழைத்துச் சென்றனர். அருணாச்சல் மாநிலத்தை சேர்ந்தவரா என கேட்டனர். அதனால், என் பாஸ்போர்ட் செல்லாது எனவும் கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அருணாச்சல், சீனாவின் ஒரு பகுதி என்பதால், பாஸ்போர்ட் செல்லாது என கூறினர். குடியேற்ற அதிகாரிகளும், சீன கிழக்கு ஏர்லைன்ஸ் ஊழியர்களும் என்னை பார்த்து நகைத்தனர். கேலி செய்தனர். சீன பாஸ்போர்ட்டுக்கு உடனடியாக விண்ணப்பித்து விடுங்கள் என பரிகாசம் செய்தனர். 18 மணி நேரமாக தடுத்து நிறுத்திய போதிலும், உணவோ, பிற வசதிகளோ எனக்கு செய்து தரவில்லை. ஜப்பானுக்கு செல்வதற்கான விசா இருந்தும் பாஸ்போர்ட்டை முடக்கியதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கடைசியாக சீன கிழக்கு ஏர்லைன்ஸ் மூலம் புதிதாக டிக்கெட் வாங்குவதற்கு அழுத்தம் கொடுத்தனர். அப்போது தான் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைப்போம் என மிரட்டினர். ஒருவழியாக லண்டனில் உள்ள நண்பர் மூலம் ஷாங்காயில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். அதன்பின் இந்திய அதிகாரிகள் விரைந்து வந்து, நள்ளிரவில் சீனாவில் இருந்து வெளியேற எனக்கு உதவி செய்தனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் பிரேமா கடிதம் அனுப்பிஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram
நவ 25, 2025 06:33

சீனர்களை இந்திய விமனநிலையங்களில் தடுத்து நிறுத்துவோம்


நிக்கோல்தாம்சன்
நவ 25, 2025 06:27

துயர சம்பவம்


மேலும் செய்திகள்