உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / க்ளைமாக்ஸ்! இறுதிகட்டத்தை எட்டியது நக்சல் ஒழிப்பு நடவடிக்கை

க்ளைமாக்ஸ்! இறுதிகட்டத்தை எட்டியது நக்சல் ஒழிப்பு நடவடிக்கை

புவனேஸ்வர்: நாடு முழுதும் நக்சல் நடமாட்டத்தை, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உறுதிபூண்டிருந்த நிலையில், ஒடிஷாவில் மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் கணேஷ் உய்கே உட்பட ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.எஞ்சியுள்ள நக்சல் அமைப்பின் ஒரே உயர்மட்ட தலைவரான தேவுஜி, 60 மற்றும் அவரது ஆதரவாளர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, நக்சல் ஒழிப்பு நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 'நாட்டு நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ள நக்சல்களின் நடமாட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும்' என, மத்திய அரசு கடந்த ஆண்டு உறுதியளித்தது. இதையடுத்து, ஒடிஷா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பதுங்கியுள்ள நக்சல்களை வேட்டையாடும் பணியில், உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதிரடி படை

இதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பான சி.பி.ஐ., - மாவோயிஸ்ட்டின் மத்திய குழு உறுப்பினராக இருந்த பசவராஜ், சத்தீஸ்கரில் கடந்த மே மாதம் கொல்லப்பட்டார். ஆந்திராவில் நடந்த தேடுதல் வேட்டையில், அந்த அமைப்பின் முக்கிய தளபதியான மாத்வி ஹித்மா, அவரது மனைவி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஒடிஷாவில் தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பின் உயர்மட்ட தலைவர் உட்பட ஆறு பேர் நேற்று சுட்டுக்கொல்லப் பட்டனர். ஒடிஷாவின், காந்தமால் - கஞ்சம் மாவட்டங்களில் எல்லையோர வனப் பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, உள்ளூர் போலீசாரின் சிறப்பு அதிரடி படை, துணை ராணுவப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். பெல்கா பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த தேடுதலின் போது, இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், இரு நக்சல்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் தப்பிய நிலையில், சகாபத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நேற்று அதிகாலை மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு நக்சல்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து ஒடிஷா கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., சஞ்சீவ் பாண்டா கூறியதாவது: கும்மா காட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், நக்சல் அமைப்புகளை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரின் தலைக்கும் தலா 23.65 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப் பட்டிருந்தது. சகாபத் பகுதியில் நடந்த மோதலில், சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய கமிட்டி உறுப்பினர் கணேஷ் உய்கே, 69, உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். கணேஷின் தலைக்கு 1.1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

தேடுதல் வேட்டை

நக்சல் அமைப்பின் முக்கிய தலைவரான இவர், தெலுங்கானாவின் புல்லேமாலா கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக பல குற்றச்செயல்கள் புரிந்து, தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில், கணேஷ் கொல்லப்பட்டுள்ளது, நக்சல் ஒழிப்பு நடவடிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.உயிரிழந்த பிற நக்சல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேடுதல் வேட்டை தொடரும். இவ்வாறு அவர் கூறினார். நக்சல் அமைப்புகளின் உயர்மட்ட தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வரும் சூழலில், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்து வருகின்றனர். இதனால், நக்சல்களை அழிக்கும் நடவடிக்கை இறுதிகட்டத்தை எட்டிஉள்ளது. எஞ்சியுள்ள சி.பி.ஐ., மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச்செயலரான தேவுஜி மற்றும் அவரது சகாக்களை பிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் இறங்கியுள்ளனர். தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநில அடர்ந்த வனப் பகுதியில் அவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. உடல்நலக் குறைவால் நடக்க முடியாமல் உள்ள தேவுஜி, ஆதரவாளர்கள் உதவியுடன் பதுங்கியிருப்பதாக கூறும் பாதுகாப்பு படையினர், அவரை விரைவில் பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட் தளபதி கணேஷ் என்கவுன்டரில் கொல்லப்பட்டது, நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய திருப்புமுனை. இதன் வாயிலாக, நக்சல்கள் இல்லாத மாநிலமாக மாறும் சூழலை ஒடிஷா எட்டியுள்ளது. - அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தாமரை மலர்கிறது
டிச 26, 2025 02:48

நக்ஸ்ல்களை தூண்டிவிடும் கம்யூனிஸ்ட்களை தடை செய்வது நல்லது. அம்பை நோவதைவிட எய்தவனை நோகடிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை