உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீடிக்கும் குழப்பம்!: ஐ.நா., கூட்டத்திற்கு அமெரிக்கா செல்வாரா மோடி? டிரம்ப் அழுத்தத்தால் நெருக்கம் காட்டும் சீனா, ரஷ்யா

நீடிக்கும் குழப்பம்!: ஐ.நா., கூட்டத்திற்கு அமெரிக்கா செல்வாரா மோடி? டிரம்ப் அழுத்தத்தால் நெருக்கம் காட்டும் சீனா, ரஷ்யா

புதுடில்லி: அமெரிக்கா உடனான வர்த்தக உறவில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அடுத்த மாதம் அங்கு நடக்கும் ஐ.நா., பொது சபைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையே, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அடுத்த வாரம் டில்லி வருகிறார். நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வரும் 18 - 21ம் தேதி வரை ரஷ்யா செல்கிறார். அமெரிக்க அழுத்தத்தை தொடர்ந்து, சீனா, ரஷ்யா உடனான நம் உறவில் நெருக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதில், 25 சதவீதம் கடந்த 7ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், மீதமுள்ள 25 சதவீதம், வரும் 27ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாலேயே, நம் நாட்டுக்கு இந்த வரியை விதித்ததாக டிரம்ப் தெரிவித்தார். இது நியாயமற்றது எனக் கூறி வரி விதிப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் உரசல் ஏற்பட்டுள்ளது.

அழைப்பு

இருப்பினும், இந்த வரி விதிப்பால் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள், நம்முடன் நெருக்கம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் செப்., 23ம் தேதி முதலே அங்கு முகாமிட துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் நடக்கும் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசவுள்ளார். ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 26ம் தேதி, பொது சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரலில், அதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு பிரச்னையால், இந்தியா - அமெரிக்கா உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது. இதில், கலந்து கொள்வது குறித்து பிரதமர் எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவிர்ப்பு

கூட்டத்தில் பங்கேற்பதன் வாயிலாக, அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக சந்திக்க வேண்டி வரும் என்பதாலேயே, கூட்டத்தில் பங்கேற்பதை பிரதமர் தவிர்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்தாண்டு நடந்த கூட்டத்தின்போது, பிரதமர் மோடி பங்கேற்பார் என சொல்லப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த ஆண்டும், இதே நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியா வருகிறார் சீன அமைச்சர்

கடந்த ஜூனில், சீனா சென்ற நம் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். அதேபோல், வரும் 31 மற்றும் செப்., 1ல், சீனாவில் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ளார். இந்த சூழலில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீ, வரும் 20ல் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கை ஒட்டிய எல்லை பகுதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே, பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. கடந்த 2020ல் லடாக்கை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்கு மோதலால், அது மேலும் சிக்கலானது. எல்லையில் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவது தொடர்பாக இரு நாடுகளும் கடந்தாண்டு முடிவெடுத்ததை அடுத்து மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதில், அடுத்து மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் அஜித் தோவலுடன், வாங் யீ பேசுவார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

ரஷ்யா செல்லும் ஜெய்சங்கர்

வரும் 18 - 21ம் தேதி வரை ரஷ்யா செல்லும் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தின் போது, 21ம் தேதி அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை அவர் சந்தித்து பேச உள்ளதை ரஷ்யா உறுதி செய்துள்ளது. துணை பிரதமர் டென்னிஸ் மந்துரோவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து ஜெய்சங்கர் ஆலோசிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரி விதிப்புக்கு நடுவே, கடந்த வாரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோரை சந்தித்து பேசிய நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் அங்கு செல்லவிருப்பது, சர்வதேச அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை