உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் பதவி கேட்டு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி! கர்நாடக காங்., மேலிட பொறுப்பாளரிடம் ஆவேசம்

அமைச்சர் பதவி கேட்டு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி! கர்நாடக காங்., மேலிட பொறுப்பாளரிடம் ஆவேசம்

பெங்களூரு: கர்நாடக காங்., கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்னைகளுக்கு, 'பஞ்சாயத்து' பேச வந்த மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவிடம் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பலரும், அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி துாக்கியுள்ளனர். இதனால், அவர் அதிர்ச்சி அடைந்தார்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடக்கும், காங்கிரஸ் அரசுக்கு இது போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்த, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இப்போது அரசுக்கு எதிராக பகிரங்கமாக பேச ஆரம்பித்து உள்ளனர். 'தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை' என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்ததுடன், அமைச்சர்கள் மீதும் சரமாரி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதனால், அரசுக்கு பாதகம் ஏற்படும் சூழ்நிலை வந்ததால், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை, இரண்டு நாட்களுக்கு முன், மேலிடம் பெங்களூரு அனுப்பி வைத்தது.

டைரி குறிப்பு

குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், பி.ஆர்.பாட்டீல், கொத்துார் மஞ்சுநாத், பிரதீப் ஈஸ்வர், புட்டசாமி கவுடா, சீனிவாஸ் உட்பட 30 எம்.எல்.ஏ.,க்களுடன் நேற்று முன்தினம் அவர் ஆலோசனை நடத்தினார். தொகுதியில் அவர்கள் செய்த பணிகள் பற்றி கேள்வி எழுப்பியவர், குறைகளையும் கேட்டுள்ளார். இவர்களில் சிலர், முதல்வர் சித்தராமையாவை மாற்றி விட்டு, சிவகுமாரை அப்பதவியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.இந்நிலையில், நேற்று 2வது நாளாக எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து, ரன்தீப்சிங் ஆலோசனை நடத்தினார். பங்கார்பேட்டை - நாராயணசாமி, பாகேபள்ளி - சுப்பாரெட்டி, காக்வாட் - ராஜு காகே, மாகடி - பாலகிருஷ்ணா, சாந்திநகர் - ஹாரிஸ் உள்ளிட்ட மூத்த எம்.எல்.ஏ.,க்கள் இதில் பங்கேற்றனர்.இவர்கள் அனைவரும், 'நாங்கள் அனைவரும் கட்சிக்கு மூத்தவர்கள். எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும்' என்று கேட்டுள்ளனர்.'கோலார் மாவட்டத்தில் இருந்து நான்கு பேர் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளோம். நான் மூன்றாவது முறை எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். ஆனால், கோலாருக்கு அமைச்சர் பதவி தரவில்லை. சீனியர் என்ற முறையில் எனக்கு அமைச்சர் பதவி வேண்டும்' என்று, பங்கார்பேட்டை நாராயணசாமி கேட்டு உள்ளார். இதுபோன்று பாகேபள்ளி சுப்பாரெட்டியும், 'என் அனுபவத்தை மதித்து, அமைச்சர் பதவி வழங்க வேண்டும்' என்று குரலை உயர்த்தி கேட்டுள்ளார்.

நோட்டீஸ்

மாகடி பாலகிருஷ்ணா, 'ம.ஜ.த.,வில் மூன்று முறையும், பா.ஜ.,வில் ஒரு முறையும் எம்.எல்.ஏ.,வாக இருந்து உள்ளேன். இப்போது ஐந்தாவது முறை எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். என் சீனியாரிட்டியை மதிக்க வேண்டும். எனக்கும் கண்டிப்பாக அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும்' என்று, கறார் காட்டியுள்ளார்.ராஜு காகே, 'பா.ஜ.,வில் மரியாதை கிடைக்கவில்லை என்று தான் இங்கு வந்தேன். இங்கேயும் என்னை அவமதிப்பது சரியல்ல. 'எனக்கு அமைச்சர் பதவி வேண்டும். இல்லாவிட்டால் நான் கட்சியில் இருப்பதில் எந்த பயனும் இல்லை' என்று, மிரட்டலாக கூறியுள்ளார்.ஆளாளுக்கு அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி துாக்கியதை பார்த்து, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார். 'உங்கள் கோரிக்கை குறித்து, முதல்வர், கட்சி மேலிடத்திடம் பேசுகிறேன்' என்று பொத்தாம் பொதுவாக கூறி அனுப்பியுள்ளார்.பின், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ''என்னை சந்தித்த எம்.எல்.ஏ.,க்கள், தொகுதிக்கு அவர்களின் பங்களிப்பு என்ன? தொகுதிக்கு என்ன வேண்டும் என்பது பற்றி விவாதித்தனர். யாரும் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கேட்கவில்லை,'' என்றார்.துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''தலைமை மாற்றம் எதுவும் இல்லை. நாங்கள் அனைவரும் சித்தராமையா கரத்தை வலுப்படுத்துவோம். ''முதல்வர் பதவி குறித்து இனி யார் பேசினாலும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவேன். கட்சியை வலுப்படுத்துவது குறித்து எம்.எல்.ஏ.,க்களுடன், மேலிட பொறுப்பாளர் ஆலோசித்து உள்ளார்,'' என்றார்.

சித்து குறித்து எம்.எல்.ஏ., அதிரடி

மூத்த எம்.எல்.ஏ.,வான பி.ஆர்.பாட்டீல், யாரிடமோ மொபைல் போனில் பேசிய வீடியோ நேற்று வெளியானது. அதில், 'சித்தராமையா மிகவும் அதிர்ஷ்டசாலி. அதிர்ஷ்டத்தால் முதல்வராகி விட்டான். அவனை சோனியாவிடம் அறிமுகப்படுத்தியதே நான் தான். நான் வளர்த்து விட்டவன் தான் அவன். என்னிடம் கார் இல்லை. ஒன்றும் இல்லை. சுர்ஜேவாலாவை சந்தித்து பேசினேன். எனது குறைகளை கேட்டார். என்ன முடிவு எடுக்க போகின்றனர் என தெரியவில்லை' என பேசியுள்ளார்.இந்த வீடியோ குறித்து, முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''ஆமாம், நான் அதிர்ஷ்டசாலி தான். நானும், பி.ஆர்.பாட்டீலும் ஒன்றாக முதல்முறை சட்டசபைக்கு தேர்வானோம். நான் முதல்வராகி விட்டேன். அவர் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அதற்கு நான் என்ன செய்ய முடியும்,'' என்றார்.

முதல்வராகணும்

சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும் என்பது நான் உட்பட பலரின் விருப்பம். மீதமுள்ள இரண்டரை ஆண்டு காலமும் அவர் முதல்வராக இருக்க, கட்சி மேலிடம் வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். அடிமட்டத்தில் இருந்து கட்சியை வலுப்படுத்தி உள்ளார். அவரை முதல்வராக்குவது சிறந்த போராட்டக்காரருக்கு கொடுக்கும் வெகுமதி போன்றது.இக்பால் ஹுசைன் ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 02, 2025 06:59

இதில் குறிப்பிட்டுள்ள எல்லாம் ரியல் எஸ்டேட் மாபியாக்கள்


Jack
ஜூலை 02, 2025 06:27

மக்களுக்கு சேவை செய்ய எவ்வளவு தியாக மனப்பான்மையுடன் மந்திரிப்பதவி எனும் முள் கிரீடத்தை சுமக்க விரும்புகிறார்கள் என்று பெருமை படுவோம்


சமீபத்திய செய்தி