உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதியோர், கணவரை இழந்தோருக்கு மாதம் ரூ.5,000 காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி வெளியீடு

முதியோர், கணவரை இழந்தோருக்கு மாதம் ரூ.5,000 காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி வெளியீடு

புதுடில்லி:'சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், டில்லியில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்' என, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.டில்லி சட்டசபைத் தேர்தல் வாக்குறுதிகளை, டில்லி காங்., தலைவர் தேவேந்திர யாதவ் நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:டில்லி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். பூர்வாஞ்சலிகளுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி, வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.அதேபோல, 25 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு, இலவச ரேஷன் கிட் வழங்கப்படும். படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு மாதந்தோறும் 8,500 ரூபாய் நிதியுதவி, ஏழைகளுக்கு சலுகை விலையில் உணவு வழங்க மாநகர் முழுதும் 100 இடங்களில் இந்திரா கேன்டீன் துவக்கப்பட்டு 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும். யமுனை நதிக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படும். திடக்கழிவு மற்றும் யமுனை மாசுபாடு தொடர்பான புகார்களைக் கையாள பசுமைக் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். பொதுப் போக்குவரத்து மற்றும் டில்லி அரசின் துறைகளில் சேவை செய்த 15,000 மார்ஷல்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்.அரசுப் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாக்கப்படும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் குறைந்தது மூன்று அணிகள் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும்.புறநகரில் உள்ள நிலத்தில் விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படும். தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக டில்லி கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்படும்.முதியோர், கணவரை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் மற்றும் ஆதரவற்றோருக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும்.மாநில அரசுப் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். பல்வேறு துறைகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். திருநங்கையருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் தங்கும் விடுதி வசதி செய்து தரப்படும். உச்ச நீதிமன்றத்தின் 2014ம் ஆண்டு தீர்ப்புப்படி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் திருநங்கையருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். பொதுஇடங்களில் திருநங்கையருக்கு கழிவறைகள் கட்டப்படும். முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் 2008ல் அறிவித்த 2008 லட்லி திட்டம் மேம்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.மாநில அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்.கணவரை இழந்தோரின் மகள் திருமணத்துக்கு 1 லட்சத்து 10,000 நிதியுதவி வழங்கப்படும்.பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கான விடுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை பரிசீலிக்கப்படும். கவுதம புத்தர், சாரநாத், புத்தகயா, சாந்த் ரவிதாஸ் பிறந்த இடம் மற்றும் பாபா சாகேப் அம்பேத்கர் பிறந் மோவ் ஆகிய இடங்களுக்கு தலித் சமூகத்தினருக்கான இலவச புனித யாத்திரை திட்டம் செயல்படுத்தப்படும்.யமுனை நதிக்கரையில் ஒரு குறிப்பிட்ட பகுதி சாத் மஹாபர்வ் விழாவுக்காக ஒதுக்கப்படும்.மேலும், 'ஸ்டார்ட் அப்' மற்றும் சிறு நிறுவனங்களுக்கு துவக்க கால நிதியுதவி வழங்கப்படும். ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறவும், அனைத்து அக்னிபாத் வீரர்களையும் பணி நிரந்தரம் செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம். டில்லி அரசு மற்றும் தொடர்புடைய அமைப்புகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்.பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக 700 நூலகங்கள் திறக்கப்படும். அரசுப் பள்ளிகளுக்கு இலவச பஸ்கள் இயக்கப்படும். விவசாயிகள் பாக்கி வைத்துள்ள மின்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை