உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவகுமாரை முதல்வராக்க காங்., - எம்.எல்.ஏ., போர்க்கொடி! கட்சிக்காக உழைத்தவருக்கு பதவி வழங்க கோரிக்கை

சிவகுமாரை முதல்வராக்க காங்., - எம்.எல்.ஏ., போர்க்கொடி! கட்சிக்காக உழைத்தவருக்கு பதவி வழங்க கோரிக்கை

பெங்களூரு : ''ஒக்கலிக சமுதாய தலைவருக்கு, முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்பது, அனைவரின் வேண்டுகோள். அந்த வகையில், சிவகுமாரை முதல்வராக்க வேண்டும். கட்சிக்காக உழைத்தவர்களை தலைமை அடையாளம் காண வேண்டும்,'' என, காங்., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. 2023 மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், 135 தொகுதிகளை கைப்பற்றி, காங்., ஆட்சிக்கு வந்த போது, மாநில தலைவர் சிவகுமார் முதல்வராவார் என, ஆதரவாளர்கள், தொண்டர்கள் எதிர்பார்த்தனர். முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இறுதியில் சித்தராமையா முதல்வரானார்.சிவகுமார் அரை மனதாக துணை முதல்வர் பதவியை ஒப்புக்கொண்டார். இதற்காக அவர் இரண்டு நிபந்தனைகளை விதித்திருந்தார். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில், நானே நீடிப்பேன். கூடுதல் துணை முதல்வரை நியமிக்க கூடாது. நான் மட்டுமே துணை முதல்வராக இருப்பேன் என்ற நிபந்தனைகளை வைத்துள்ளார். மேலிடமும் அதற்கு சம்மதித்ததாக, தகவல் வெளியானது.அரசு அமையும் போது, சித்தராமையா, சிவகுமார் தலா இரண்டரை ஆண்டு முதல்வராக இருக்க, மேலிட அளவில் ஒப்பந்தம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளும், சித்தராமையாவே முதல்வர் என, அவரது ஆதரவு அமைச்சர்கள் மகாதேவப்பா, சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா, ஜமீர் அகமது கான் உட்பட, சிலர் கூறுகின்றனர். இதனால், சிவகுமாரின் ஆதரவாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.இதற்கிடையில், மூன்று துணை முதல்வர்களை கொண்டு வந்து, சிவகுமாரின் ஓட்டத்துக்கு முட்டுக்கட்டை போட, சித்தராமையா ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு காங்., மேலிடம் செவி சாய்க்கவில்லை, இத்தகைய செயல்களால் கொதிப்படைந்துள்ள சிவகுமார் ஆதரவாளர்கள், இவரை முதல்வராக்க வேண்டும் என, போர்க்கொடி உயர்த்துகின்றனர்.இதில் மாகடி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாவும் ஒருவர். ம.ஜ.த.,வில் இருந்த இவரை, காங்கிரசுக்கு அழைத்து வந்தது, மாகடியில் சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தது சிவகுமார். இருவரும் ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இது குறித்து, பெங்களூரில் நேற்று பாலகிருஷ்ணா கூறியதாவது:எங்கள் சமுதாய தலைவரான சிவகுமாரை அடையாளம் கண்டு முதல்வர் பதவி வழங்க வேண்டும். சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சியில் அமர்ந்துள்ளது என்றால், அதன் பின்னே சிவகுமாரின் உழைப்பு உள்ளது. முதல்வராகும் தகுதி, அருகதை அவருக்கு உள்ளது.ஒக்கலிக சமுதாய தலைவருக்கு, முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்பது, அனைவரின் வேண்டுகோள். நாங்கள் இப்போதே பதவி தாருங்கள் என, கேட்கவில்லை. ஆனால் வாய்ப்பு வரும் போது, சிவகுமாரை முதல்வராக்க வேண்டும். கட்சிக்காக உழைத்தவர்களை அடையாளம் காண வேண்டும். சரியான முடிவை எடுக்க வேண்டும்.துணை முதல்வர் பதவிக்காக, சிலர் வேண்டுகோள் விடுக்கின்றனர். இதற்கு எங்களின் ஆட்சேபம் இல்லை. ஆனால் துணை முதல்வர் பதவி கேட்பவர்கள், லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறும் பொறுப்பை ஏற்க வேண்டும். ஐந்து துணை முதல்வர்கள் பதவி உருவாக்க வேண்டும் என, கேட்கின்றனர். இவர்கள் தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறட்டும். அதன்பின் துணை முதல்வர் பதவி கேட்கட்டும். இல்லையென்றால் அமைச்சர் பதவியை, அவர்கள் ராஜினாமா செய்ய தயாரா.கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும் என்பதன் பின்னணியில், பரஸ்பரம் காலை வாரும் முயற்சி இருப்பதாக, நான் நினைக்கவில்லை. அரசியலில் வாய்ப்பு கேட்பது சகஜம். ஆனால் அதற்கு தகுந்தபடி, கட்சிக்கும் பங்களிப்பை அளிக்க வேண்டும். லோக்சபா தேர்தலை சவாலாக கருத வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஏற்கனவே மூன்று துணை முதல்வர் பதவி கேட்டு, பலரும் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இதற்கிடையில் சிவகுமாரை முதல்வராக்க, ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்துவது, காங்., மேலிடத்துக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி