உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலா கோவிலுக்குள் சடலங்கள் புதைத்ததாக புகார் அளித்தவர் திடீர் பல்டி

தர்மஸ்தலா கோவிலுக்குள் சடலங்கள் புதைத்ததாக புகார் அளித்தவர் திடீர் பல்டி

பெங்களூரு: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை, கர்நாடகாவின் தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தவர், தற்போது அதை மறுத்துள்ளார். மர்ம கும்பல் மிரட்டலால் பொய் புகார் அளித்ததாக கூறியுள்ள அவர், மண்டை ஓடு, எலும்புகளையும் அந்த கும்பலே தந்ததாக, 'திடுக்' தகவல்களை வெளியிட்டு உள்ளார். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. இங்குள்ள கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, பெல்தங்கடி தாலுகாவின் தர்மஸ்தலாவில், பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் உள்ளது. இந்த கோவிலில், 1995 முதல் 2012ம் ஆண்டு வரை, துாய்மை பணியாளராக வேலை செய்த ஒருவர், ஜூலை 3ம் தேதி சில வக்கீல்களுடன் பெல்தங்கடி நீதிமன்றம் சென்று, பிரிவு 164ன் கீழ், நீதிபதி முன் வாக்குமூலம் அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2ghohftu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், 'தர்மஸ்தலா கோவிலில் நான் பணியாற்றிய காலகட்டத்தில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை, என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்தேன். 'கடந்த 2012ம் ஆண்டிற்கு பின், வேறு மாநிலத்திற்கு சென்று விட்டேன். புதைக்கப்பட்ட பெண்கள் என் கனவில் வந்ததால் மனசாட்சி உறுத்தியது. தற்போது உண்மையை சொல்ல வந்துள்ளேன்' எனக் கூறினார். மேலும் சில எலும்பு கூடுகள், மண்டை ஓடுக ளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். எஸ்.ஐ.டி., அமைப்பு இது, கர்நாடகா மட்டு மின்றி, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெல்தங்கடி போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவானது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா உள்ளிட்டோர், இந்த வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, மாநில அரசுக்கு அழுத்த ம் கொடுத்தனர். இதன்படி, ஜூலை 19ம் தேதி எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையிலான குழுவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனுசேத், ஜிதேந்திர குமார் தயமா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசா ர் நியமிக்கப்பட்டனர். இவர்கள், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நேத்ராவதி ஆற்றின் கரையோரம், புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்களை, 'மார்க்கிங்' செய்தனர். ஜூலை 29ம் தேதி முதல் அங்கு குழிகள் தோண்டப் பட்டன. ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. ஆறாவது இடத்தில் தோண்டிய போது, சில எலும்பு கூடுகள், மண்டை ஓடு கிடைத்தன. மேலும், ஏழு இடங்களில் தோண்டியும் எதுவும் சிக்கவில்லை. இந்த விஷயத்தில், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., முதலில் அமைதி காத்தது. தர்மஸ்தலாவில் எதுவும் சிக்கவில்லை என்று தெரிந்ததும், கேள்விகளால் அரசை துளைத்து எடுத்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கிய அரசு, புகார்தாரரிடம் தீவிர விசாரணை நடத்தும்படி, எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து எஸ்.ஐ.டி., நடத்திய, 'கிடுக்கிப்பிடி' விசாரணையில், புகார்தாரர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை வந்த கும்பல் புகார்தாரர் கூறியதாக, போலீசார் வெளியிட்ட தகவல்கள்: தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில், 1995 - 2012 வரை வேலை செய்தேன். பின், வேலையை விட்டுவிட்டு, தமிழகத்தின் சென்னைக்கு சென்று விட்டேன். 2023 டிசம்பர் மாதம், சென்னையில் ஒரு கும்பல் என்னை சந்தித்தது. 'தர்மஸ்தலாவில் நீ வேலை செய்த போது, எத்தனை உடல்களை புதைத்தாய்' என்று என்னிடம் கேட்டனர். அதற்கு, 'தர்மஸ்தலா புனித தலம். இங்கு வந்து உயிரிழந்தால் மோட்சம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், பலர் இங்கு வந்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் உடல்களை, போலீஸ், கிராம பஞ்சாயத்து மூலம், சட்டப்படி புதைத்துள்ளேன்' என்று கூறினேன். ஆனால் அந்த கும்பல், 'உடல்களை சட்டவிரோதமாக புதைத்ததாக கூற வேண்டும்' என்று என்னிடம் வலியுறுத்தியது. நான், முடியாது என்று மறுத்து விட்டேன். தைரியம் வந்தது ஆனாலும், அந்த கும்பல் என்னை விடவில்லை. 'நாங்கள் சொல்வது போன்று, நீ சொல்ல வேண்டும்' என்று அழுத்தம் தந்தனர். என்னென்னவோ சொல்லி என் மனதை மாற்றி விட்டனர். சென்னையில் இருந்து, அவர்களே என்னை கர்நாடகாவுக்கு அழைத்து வந்தனர். போலீசாரிடம் என்ன சொல்ல வேண்டும்; நீதிமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்று எனக்கு பயிற்சி அளித்தனர். நான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற எலும்பு கூடுகள், மண்டை ஓடு அந்த கும்பல் கொடுத்தது தான். நீதிமன்றத்திற்கு சென்று பொய் சொல்ல எனக்கு பயமாக இருந்தது. 'சுஜாதா பட் என்ற பெண் தர்மஸ்தலாவுக்கு சென்ற தன் மகளை காணவில்லை' என்று, போலீசில் புகார் செய்வார். அதே நேரத்தில் நீயும், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று கூறினர். சுஜாதா பட் போலீசில் புகார் அளித்த பின், எனக்கு தைரியம் வந்தது. நீதிமன்றத்திற்கு சென்று தைரியமாக, பொய் வாக்குமூலம் அளித்தேன். இவ்வாறு போலீசார் கூறினர். அரசின் ஒப்புதல் புகார்தாரர் அடித்த அந்தர்பல்டியால், வழக்கின் முழு விசாரணையும் மாற உள்ளது. தர்மஸ்தலா கோவிலுக்கு களங்கத்தை ஏற்படுத்த சதி நடந்திருப்பதும் அம்பலம் ஆகியுள்ளது. இதுவரை, புகார்தாரரை வெறும் சாட்சியாக மட்டுமே எஸ்.ஐ.டி., வைத்து இருந்தது. இனி, அவரை வழக்கின் குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பள்ளம் தோண்டியது உட்பட, வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அறிக்கை தயாரித்து வருகின்றனர். இந்த நடைமுறை முடிந்த பின், புகார்தாரர், அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்க உள்ளனர். ஒரு கும்பல் தன்னை அணுகியது என்று தான் புகார்தாரர் கூறி உள்ளார். அந்த கும்பல் எது, அதில் எத்தனை பேர் இருந்தனர் என்பது பற்றி, அவர் எதுவும் சொல்லவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்பே கணித்த தமிழ் அதிகாரி

தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்களை புதைத்ததாக, நீதிமன்றத்தில் புகார்தாரர் வாக்குமூலம் அளித்த பின், பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. ஆனால், விசாரணை உடனே துவங்கவில்லை. இதற்கு புகார்தாரர் தரப்பு வக்கீல்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். தட்சிண கன்னடா மாவட்ட போலீசார், தவறு செய்தவர்களை தப்பிக்க வைக்க முயற்சிப்பதாக கூறினர். ஆனால், தட்சிண கன்னடா எஸ்.பி.,யான தமிழர் அருண், 'புகார்தாரர் கூறுவதில் சந்தேகம் உள்ளது. அவரை, உண்மை கண்டறியும் சோதனை க்கு உட்படுத்த வேண்டும்' என்று கூறினார். ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல், எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டு, மாநில காங்கிரஸ் அரசு பெரிய தவறை செய்து விட்டதாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தோண்டும் பணி நிறுத்தம்

தர்மஸ்தலா விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று பதில் அளிக்கையில், “தர்மஸ்தலாவில் பள்ளம் தோண்டிய போது, சில இடங்களில் கிடைத்த தடயங்கள், தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து அறிக்கை வரும் வரை, தர்மஸ்தலாவில் பள்ளம் தோண்டும் பணிகள் நிறுத்தப்படும்,” என்றார்.

புகைப்படத்தில் இருக்கும் பெண் யார்?

தர்மஸ்தலா சென்று காணாமல் போன, தன் மகள் அனன்யா பட்டை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் என்று கூறப்படும் சுஜாதா பட், பெல்தங்கடி போலீசில் புகார் அளித்தார். புகார்தாரர் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி பார்த்தால், சுஜாதா பட்டும் மர்ம கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிகிறது. இதனால், சுஜாதா பட்டின் சொந்த ஊரான ஷிவமொக்கா ரிப்பன்பேட்டில் விசாரணை நடத்த, எஸ்.ஐ.டி., குழு சென்றுள்ளது. இதற்கிடையில், 'இவர் தான் என் மகள் அனன்யா பட்' என்று, சுஜாதா பட் நேற்று முன்தினம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் இருப்பது அனன்யா பட்டா அல்லது வேறு யாருமா என்றும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

shakti
ஆக 21, 2025 15:53

மிஷ நரிகள் வேலை


theruvasagan
ஆக 19, 2025 17:43

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரிந்துவிடும் என்பார்கள். இந்த பிராடு வேலையில் யார் யார் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பதை சொல்ல தேவையில்லை. ஆப்பை பிடுங்கின குரங்கு கதைதான் அந்த சைத்தான்களுக்கு


Rathna
ஆக 19, 2025 12:27

பாவ மன்னிப்புகாரன் பண மழையில் இது நடந்த சதியாக இருக்கலாம். அல்லது மேற்கு ஆசியா ஜிஹாதி கூட்டங்களின் சதியாக இருக்கலாம். அங்கு ஆளுபவன் மீதே நம்பிக்கை மக்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. இது தான் உண்மை.


J.Isaac
ஆக 19, 2025 10:40

முழு பூசணிக்காயையே விழுங்கிவிட்டார்கள்


Thravisham
ஆக 19, 2025 13:31

உண்மைய ஒத்துக்க முடில.


N Annamalai
ஆக 19, 2025 10:28

தர்மஸ்தலா தலைமை அதிகாரி கடவுள் என நம்ம்பும் மக்களின் நம்பிக்கையை உடைத்தெறிய செய்த திட்டமிட்ட சதி .உண்மை உண்மை தான் .தர்மம் தலை காக்கும் .


மூர்க்கன்
ஆக 20, 2025 09:48

பல கொடூரங்களை அரங்கேற்றும் கட்டப்பஞ்சாயத்து பேர்வழி உங்களுக்கு கடவுளா?? விளங்கிடும் .


நிக்கோல்தாம்சன்
ஆக 19, 2025 07:39

இப்போ சொல்லுங்க குரூப், உங்களின் விஷம் எவ்வளவு பவர்புல் என்று


Natarajan Ramanathan
ஆக 19, 2025 06:08

இது கண்டிப்பாக மிஷனரிகளின் வேலையாகத்தான் இருக்கும். முழுமையான விசாரணை வேண்டும்.


J.Isaac
ஆக 19, 2025 10:39

வந்துவிட்டார் யோக்கியர்.


லிங்கம், கோவை
ஆக 19, 2025 05:10

இதனிடையே... நிறைய புல்லுருவிகள் இந்து மத விரோதிகள் சமூக வலைதளங்களில் இனிமேல் யாரும் தர்மசாலா செல்ல வேண்டாம் என்றும் அங்கு நிறைய கொலைகள் நடந்திருப்பதாகவும் கூறிவந்தனர். சில ஊடகங்கள் பேட்டி என்ற பெயரில் 4000 பிணங்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவருமே சிறுமிகள் என்றும் கூறி தர்மசாலாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தினர். அந்த பதிவின் அடியில் கமெண்ட் போட்ட பல பேர் திட்டமிட்டு தர்மசாலாவில் மூட வேண்டும் என்றும் இங்குள்ள சில யோக மையங்களையும் மூட வேண்டும் என்றும் வெறித்தனமாக கூச்சலிட்டனர். தயவுசெய்து இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இனி ஒரு முறை இதே மாதிரி தவறு நடக்காமல் நீதிமன்றங்களும் காவல்துறையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு இந்து மடங்களுக்கு அடியிலும்,யோக மையங்களுக்கு அடியிலும் நிறைய பிணங்கள் புதைக்கப்பட்டதாக கூறி கலங்கத்தை ஏற்படுத்துவர்.


Kasimani Baskaran
ஆக 19, 2025 04:04

மகா கேடித்தனமான எண்ணத்தில் புகார் கொடுத்தவரை தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஆக 19, 2025 01:55

கர்நாடக தர்மஸ்தலா தவறு செய்ய வாய்ப்பே இல்லையே என்று மக்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, இந்த மனிதர் உடலை மூடிக்கொண்டு கண்டபடி கதைவிட்டு மக்களை முட்டாளாக்கி கொண்டிருந்தார். இப்போது உண்மை வெளிவந்துவிட்டது. இதே மாதிரி ராகுல் தேர்தல் கமிஷன் மீது அவதூறு பரப்பி வருகிறார். உள்ளே வைத்து விசாரித்தால், ராகுல் பல்டி அடிப்பார்.


Rajan A
ஆக 19, 2025 04:17

இப்பவே ஆப்படித்த குரங்கு மாதிரி ஆகிவிட்டார்.உண்மையான புகார் என்றால் பிரமாண பத்திரம் தைரியமாக கொடுக்க வேண்டியது தானே? கைப்புள்ள மாதிரி பம்முகின்றார். கட்டதுரை விடுவதாக இல்லை. இந்த ஐடியா கொடுத்த ஆளை வலை வீசி தேடுகின்றனர்


Thravisham
ஆக 19, 2025 13:35

இவருக்கு கோடிக்கணக்கில் காசு கொடுத்த ஜின்பிங்கிக்கு ஏன் தெரியவில்லை?


சமீபத்திய செய்தி