| ADDED : அக் 19, 2024 06:14 PM
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.,) - காங்கிரஸ் கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி., மற்றும் இடதுசாரிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் முடிவு ஏற்படவில்லை.81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ.,13 மற்றும் 20 ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டுக்கள் நவ.,23ல் எண்ணப்படுகின்றன. தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. முதற்கட்ட தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு நேற்று முடிந்தது. அங்கு ஆளும் ஜே.எம்.எம்., காங்கிரஸ் அடங்கிய ' இண்டியா' கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு முடிந்தது. இதன்படி ஜே.எம்.எம்., காங்கிரஸ் கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் தனித்தனியாக எத்தனை தொகுதிகளில் போட்டி என்ற விபரம் வெளியாகவில்லை. எஞ்சிய 11 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அவர்களுடன் பேசி உடன்பாடு ஏற்படுத்தவில்லை. இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார். கடந்த தேர்தலில் ஜே.எம்.எம்., 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால், இம்முறை காங்கிரசுக்கு 27 அல்லது 28 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் எனக்கூறப்படுகிறது.