| ADDED : ஜன 26, 2024 07:02 AM
துமகூரு: வாரிய தலைவர்கள் பதவிகளை நிரப்புவது குறித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இணைந்து தயாரித்த பெயர் பட்டியலில், காங்கிரஸ் மேலிடம் சிலரது பெயரை கைவிட்டு உள்ளது.கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சொந்த ஊரான, கலபுரகியை சேர்ந்த நான்கு பேர் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா துமகூரில் நேற்று அளித்த பேட்டி:முதல்வர், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, வாரிய தலைவர் பதவிக்கு அனுப்பப்பட்ட பெயர் பட்டியலில், மேலிடம் திருத்தம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இஷ்டத்திற்கு செய்கின்றனர். கட்சிக்காக உழைத்தவர் யார் என்று, எங்களுக்கு தெரியும். இந்த விவகாரத்தில் மேலிட தலைவர்கள் பெயரை குறிப்பிட நான் விரும்பவில்லை.லோக்சபா தேர்தல், வேட்பாளர் தேர்வு விஷயத்திலும் இப்படி செய்தால், கர்நாடகாவில் வெற்றி பெற முடியாது. துமகூரில் காங்கிரஸ் வேட்பாளராக, முத்தேஹனுமேகவுடா போட்டியிடுவது 99 சதவீதம் உறுதியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் வேட்பாளர் தோற்றால், அமைச்சர் பதவியை, ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.பதவியை ராஜினாமா செய்ய நான் தயார். நாங்கள் என்ன மேலிடத்தின் அடிமைகளா. பா.ஜ.,வில் ஜெகதீஷ் ஷெட்டர் அவமானப்படுத்தப்பட்டார். சுயநலத்திற்காக அங்கிருந்து காங்கிரசுக்கு வந்தார். இப்போது மறுபடியும் பா.ஜ.,வுக்கு சென்று விட்டார். அவர் அந்த கட்சியில் நீடிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.