உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  வாடகை தாய் விவகாரத்தில் தம்பதி ஆஜராக தேவையில்லை: ஐகோர்ட்

 வாடகை தாய் விவகாரத்தில் தம்பதி ஆஜராக தேவையில்லை: ஐகோர்ட்

புதுடில்லி:'கனடா நாட்டில் வாழும் தம்பதி, மருத்துவ குழு முன் ஆஜராக வேண்டிய தேவையில்லை' என உத்தரவிட்டுள்ள டில்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பாக, மருத்துவ குழு பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்துள்ளது. இந்தியாவில் இருந்து வெகு தொலைவில், 10 ஆயிரம் கி.மீ., விமான பயண துாரத்தில் உள்ள கனடா நாட்டில் வாழும் இந்திய தம்பதி, வாடகைத் தாயை அமர்த்திக் கொள்ளும் விவகாரம் தொடர்பாக, மருத்துவ குழு முன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, மருத்துவ குழுவுக்கு கடிதம் அனுப்பினர். அதை மறுத்து, அந்த தம்பதிக்கு நோட்டீஸ் வழங்கிய மருத்துவ குழு, நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த தம்பதி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், நீதிபதி சச்சின் தத்தா, கடந்த 10ம் தேதி பிறப்பித்த உத்தரவு: டில்லி மாவட்ட மருத்துவ குழு, என்ன காரணத்திற்காக கனடா நாட்டில் வாழும் தம்பதியை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது என்பது தெரியவில்லை. என்ன காரணத்திற்காக இருந்தாலும், அந்த தம்பதி நேரில் ஆஜராக வேண்டியதில்லை. அந்த தம்பதி தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்றுள்ள ஆதாரங்களை, டில்லி மாவட்ட மருத்துவ குழு முன்னதாக ஆராய்ந்து, ஆன்லைன் வாயிலாக அந்த தம்பதியிடம் பேசி, அதற்கான முடிவை எடுக்க வேண்டும் . இவ்வாறு உத்தர விட்டார். தற்போது கனடா நாட்டில் வாழும் அந்த தம்பதி, 2015ல் திருமணம் புரிந்துள்ளது. குழந்தை இல்லாததால், வாடகைத் தாயை அமர்த்திக் கொள்ள அனுமதி கேட்டு, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் தான், மருத்துவக் குழு பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்