புதுடில்லி : 'பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் விவசாயிகள், நெடுஞ்சாலை போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாவட்ட விவசாய சங்கத்தினர், 'விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும்.'விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி நோக்கிய பேரணியை பிப்ரவரி மாதம் துவக்கினர்.இவர்கள், பஞ்சாப் - ஹரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கானவுரி எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மேற்கொண்டு பேரணியை தொடர முடியாதபடி அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பிப்., 13ல் இருந்து விவசாய சங்கத்தினர், எல்லையில் அமர்ந்தபடி போராட்டத்தை தொடர்கின்றனர்.இந்நிலையில், விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தல்வால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கடந்த மாதம் 26ல் அறிவித்தார். அவர் போராட்டம் துவங்குவதற்கு சில மணி நேரம் முன், கானவுரி எல்லையில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார், லுாதியானாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.இவரை போலீசார் சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகக் கூறி, கடந்த மாதம் 29ல் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.அன்றைய தினம் மாலை, மருத்துவமனையில் இருந்து ஜக்ஜித் சிங் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாளான நவ., 30ல், கானவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஜக்ஜித் சிங் துவங்கினார். இவர் தாக்கல் செய்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஜக்ஜித் சிங் தல்வால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அறிந்தோம். விவசாயிகளின் கோரிக்கைகளை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. இந்த ஜனநாயக நாட்டில், அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அது, மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது. பஞ்சாபின் உயிர்நாடியாக இருப்பது கானவுரி எல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு போராட்டம் நடத்துவது, மக்களுக்கு மிகப் பெரிய அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது.போராட்டத்தை அமைதியாக நடத்தும்படி தன் ஆதரவாளர்களுக்கு ஜக்ஜித் சிங் அறிவுறுத்த வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
டில்லி
பல்வேறு விவசாய சங்கத்தினர் இணைந்து, உ.பி.,யின் நொய்டாவில் இருந்து பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்லப்போவதாக நேற்று அறிவித்தனர்.இதையடுத்து, டில்லி - நொய்டா எல்லையின் இருபுறமும் போலீசார் தடுப்புகளை நேற்று அமைத்தனர். இதனால், டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; கார்கள் பல கி.மீ., துாரத்துக்கு வரிசைகட்டி நின்றன. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.இதற்கிடையே, அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த் தையை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர். இதையடுத்து நேற்று மாலையில் போக்குவரத்து சீரானது.