விபத்தில் 3 பேர் பலி
பெங்களூரு - மைசூரு 10 வழிச்சாலையில், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, ராம்நகர் சென்னப்பட்டணா அருகே டி.டி., எனும் டெம்போ டிராவலர் வேன் சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த, மைசூரின் சோமலிங்கப்பா, 70, சோமண்ணா, 68, ராஜேஸ்வரி, 52 இறந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். பாய்லர் வெடித்து தொழிலாளி பலி
ராம்நகர் திப்பு படவானேயில் அக்ரம் பாஷா என்பவருக்குச் சொந்தமான, பட்டு நுால் தொழிற்சாலை உள்ளது. இங்கு தொழிலாளியாக வேலை செய்தவர் சனாஉல்லா கான், 63. நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள பாய்லர் அருகில், சனாஉல்லா கான் நின்றார். அப்போது திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. படுகாயம் அடைந்த சனாஉல்லா கான் இறந்தார். ரூ.45.44 லட்சம் தங்ககட்டி பறிமுதல்
மங்களூரு பஜ்பேயில் உள்ள சர்வதேச விமான நிலைய, கழிப்பறையில் ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்து, தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. அதன் எடை 733 கிராம் இருந்தது. மதிப்பு 45.44 லட்சம் ரூபாய். சுங்க அதிகாரிகளிடம் சிக்கி விடுவோம் என்ற பயத்தில், தங்கக்கட்டி கடத்தி வந்த பயணி, கழிப்பறையில் போட்டு சென்றது தெரியவந்துள்ளது. ரவுடி கூட்டாளிகள் இருவர் கைது
பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிப்பவர் ரங்கநாத். டிராவல்ஸ் ஏஜென்சி நடத்துகிறார். மஞ்சுநாத் என்பவரிடம் 23 லட்சம் கடன் வாங்கினார். கடனையும், வட்டியையும் திரும்பிக் கொடுத்துவிட்டார். ஆனால் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் தரும்படி, ரங்கநாத்திடம், மஞ்சுநாத் கேட்டு உள்ளார். அதற்கு அவர் மறுத்தார். இதனால் ரவுடி சைக்கிள் ரவியின் கூட்டாளிகள் உமேஷ், சுரேஷ் மூலம் ரங்கநாத்தை, மஞ்சுநாத் மிரட்டி உள்ளார். ரங்கநாத் அளித்த புகாரில் சுரேஷ், உமேஷ், மஞ்சுநாத் கைது செய்யப்பட்டனர். கல்லுாரி மாணவர் தற்கொலை
பீகாரை சேர்ந்தவர் சத்யம் சுமன், 19. உடுப்பி மணிப்பாலில் உள்ள மாஹே பல்கலைக்கழகத்தில், இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்தார். நேற்று முன்தினம் கல்லுாரியில் நடந்த தேர்வில் காபி அடித்தார். தேர்வு கண்காணிப்பாளரிடம் சிக்கிக் கொண்டார். இதனால் தேர்வு அறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். மனம் உடைந்த அவர், கல்லுாரியின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ரவுடியை கொல்ல கூலிப்படை
பெங்களூரு விவேக்நகரில் வசித்தவர் சதீஷ் என்ற மிலிட்டரி சதீஷ், 30. ரவுடியான இவரை கடந்த மாதம் 30ம் தேதி, வீடு புகுந்து நான்கு வாலிபர்கள் வெட்டிக் கொன்றனர். கொலை நடந்து இரு நாட்களில் கைதாகினர். விசாரணையில் முன்விரோதத்தில் கொன்றதாக கூறினர். ஆனால் கொலைக்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும், ரவுடி சிவகுமாரின் கூட்டாளியை, சதீஷ் கொலை செய்தார். இதனால் பழிக்கு, பழியாக சதீஷை கொல்ல, சிவகுமார் சிறையில் இருந்தே திட்டம் தீட்டியதும், கைதான நான்கு வாலிபர்களுக்கும் 30 லட்சம் ரூபாய் கொடுத்து, கூலிப்படையாக ஏவி சதீஷை கொன்றதும் தெரிய வந்துள்ளது. சிறுமிக்கு கட்டாய திருமணம்
பெங்களூரு சர்ஜாபூரில் தம்பதியின் மகள் 14 வயது சிறுமி. கடந்த 15ம் தேதி சர்ஜாபூர் அருகே, ஹலசினபுரா கிராமத்தில் வசிக்கும், தாத்தா வீட்டிற்கு சென்றார். அப்போது சிறுமிக்கும், அவரது மாமாவான வினோத்குமார், 24, என்பவருக்கும், தாத்தா உட்பட குடும்பத்தினர், கட்டாய திருமணம் செய்து வைத்து உள்ளனர். இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய் நேற்று முன்தினம், சர்ஜாபூர் போலீசில் புகார் செய்தார். வினோத்குமார் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.