உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியில் ராமரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

அயோத்தியில் ராமரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

அயோத்தி, அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை முடிவடைந்த மறுநாளான நேற்று, பால ராமரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் விமரிசையாக நடந்து முடிந்தது. இந்நிலையில், பொது மக்கள் பால ராமரை தரிசனம் செய்ய நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். காலையில் கோவில் திறந்ததும் ராமரை தரிசிப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு முதலே, கோவில் வாசலில் பக்தர்கள் திரள துவங்கினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்தனர். உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டுள்ளதால், கோவில் முன் மக்கள் கூட்டம் அலை மோதியது. கோவிலுக்கு செல்லும், 'பக்தி பாதை' முழுதும் கட்டுக்கடங்காத கூட்டம். போலீசார் தடுப்புகள் அமைத்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக உள்ளூர் போலீஸ் உடன், விரைவு அதிரடி படை, சஷாஸ்த்ர சீமா பால் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக, 8,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலையில் கோவில் நடை திறந்து முதல் ஆரத்தி நடந்தபோது, 'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷம் அயோத்தி முழுதும் எதிரொலித்தது. பீஹாரை சேர்ந்த நிதீஷ்குமார் என்ற பக்தர், 600 கி.மீ., சைக்கிள் ஓட்டியபடி அயோத்தி வந்தடைந்துள்ளார். பால ராமரை தரிசித்த பின்னரே ஊர் திரும்ப திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.சத்தீஸ்கரில் இருந்து ஒரு குழு, நடை பயணமாக அயோத்தி வந்தடைந்துள்ளது. இவர்களை போல, நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ராவின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது:பிராண பிரதிஷ்டைக்கு பின் அயோத்தி நகரம் துாய்மை அடைந்துள்ளது. த்ரேதா யுகத்தில், ராமர் மீண்டும் அயோத்தி திரும்பியபோது இந்த நகரமே மகிழ்ச்சி அடைந்தது. அந்த த்ரேதா யுகம் இன்று மீண்டும் கண் முன்னே விரிகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். எங்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் எதிரொலிக்கின்றன. அதை பார்க்கும் போது, ராமர் வாழ்ந்த த்ரேதா யுகத்திற்கே சென்றது போல உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

காலத்துக்கும் நினைவிருக்கும்

இதற்கிடையே, நேற்று முன்தினம் நடந்த பிராண பிரதிஷ்டை நிகழ்வுகளின், 'வீடியோ' தொகுப்பை பிரதமர் மோடி தன் சமூகவலைதள பக்கத்தில் நேற்று பகிர்ந்தார். அதில், 'அயோத்தியில் நேற்று முன்தினம் நாம் கண்ட காட்சிகள் காலத்துக்கும் நம் நினைவில் பொறிக்கப்பட்டு இருக்கும்' என, பதிவிட்டு இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ