இளம்பெண்ணுக்கு தொல்லை சிலிண்டர் டெலிவரி பாய் கைது
விஜயநகர்: ஹோட்டலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, காஸ் சிலிண்டர் டெலிவிரி பாய் கைது செய்யப்பட்டார். நண்பர்களிடம் விட்ட சவாலில் வெற்றி பெற, இந்த செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.பெங்களூரு விஜயநகர் ஆர்.பி.சி., லே - அவுட்டில் உள்ள ஹோட்டலுக்கு, கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி இரவு, இளம்பெண் உணவு சாப்பிட வந்தார். ஹோட்டல் பில் கவுன்டர் அருகில் நின்றார். அப்போது வாலிபர் ஒருவர், இளம்பெண் மீது வேண்டும் என்றே விழுந்து, பாலியல் தொல்லை கொடுத்தார்.இளம்பெண் தகராறு செய்ததால், வாலிபரும், அவரது இரு நண்பர்களும் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து ஹோட்டல் காசாளர் சுகன்யா அளித்த புகாரில், விஜயநகர் போலீசார் விசாரித்தனர்.ஹோட்டல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஹம்பிநகரின் சந்தன், 23, என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தததை, அவர் ஒப்புக்கொண்டார். இவர் காஸ் சிலிண்டர் டெலிவரி பாயாக பணிபுரிகிறார்.சந்தனும், அவரது நண்பர்கள் இருவரும் ஹோட்டலுக்கு சென்ற போது, இளம்பெண்ணிற்கு முடிந்தால் பாலியல் தொல்லை கொடு என்று, சந்தனிடம், நண்பர்கள் இருவரும் சவால் விட்டனர். அந்த சவாலில் வெற்றி பெற, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, விசாரணையில் தெரியவந்து உள்ளது.