புதுடில்லி: டில்லி தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. டில்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி மக்கள் 12 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உமர் நபி என்ற டாக்டர் ஓட்டி வந்த வெள்ளை நிற காரில் (HR 26 CE 7674) வெடிமருந்துகளை நிரப்பி வந்து இந்தத் தாக்குலை நிகழ்த்தியது தெரிய வந்தது. என்ஐஏ அதிகாரிகள் நடத்திய பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, இது தற்கொலைப் படை தாக்குதல் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ தொடர்ந்து கைது செய்து வருகிறது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த உமர் நபிவெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தான். டில்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருக்கிறான் என்பது தெரியவந்துள்ளது. லும், டெலிகிராம் மூலம் தனது பாகிஸ்தான் கூட்டாளிகள் பகிர்ந்து கொண்ட வெடிகுண்டு தயாரிக்கும் நுட்பங்களையும் சோதித்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் புது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, சுமார் 3 மணிநேரம் சுனேஹ்ரி மசூதி பார்க்கிங்கில் காரை நிறுத்தி, வெடிபொருட்களை தயார்படுத்தியது, சிசிடிவி காட்சிகளின் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த நவ.,10ம் தேதி உமர் நபி சுனேஹ்ரி மசூதியின் பார்க்கிங்கிற்கு பிற்பகல் 3.19 மணியளவில் காரில் சென்றுள்ளான். மாலை. 6.28 மணிக்கு தான் கார் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. 6.52 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பார்க்கிங்கில் கார் நிறுத்தப்பட்டிருந்த 3 மணிநேரத்தில், ஒருமுறை கூட அவன் காரை விட்டு இறங்கி வரவில்லை. எனவே, அந்த சமயத்தில் தான் வெடிபொருட்களை தயார் செய்து கொண்டிருப்பான் என்று என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது; அன்றைய தினம் (நவ.,10) காலை டில்லிக்கு காரில் வந்த உமர், தன்னுடைய கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளான். அப்போது, தான் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆலோசித்துள்ளனர். பழைய டில்லிக்கு செல்வதற்கு முன்பாக, மயூர் விஹார் மற்றும் கன்னாட் பிளேஸ் வழியாக காரில் சென்றுள்ளான். பிறகு செங்கோட்டை அருகே உள்ள பார்க்கிங்கை தேர்வு செய்துள்ளனர். ஆனால், அன்றைய தினம் செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், பார்க்கிங் காலியாக இருந்துள்ளது. இதனால், தற்கொலைப்படை தாக்குதல் திட்டத்தை கைவிட்டுள்ளான். அதற்குப் பதிலாக, செங்கோட்டை மற்றும் சாந்தினி சவுக் உள்ள நெருக்கடியான நேதாஜி சுபாஷ் மார்க் சாலையில் தாக்குதலை நடத்த உமரும், அவனது கூட்டாளிகளும் முடிவு செய்து, தாக்குதலை நடத்தியுள்ளனர், இவ்வாறு கூறினர்.