| ADDED : செப் 09, 2026 09:23 PM
–சிறப்பு நிருபர்– டில்லியில் தனியார் ஹாஸ்டல் கட்டடம் இடிந்து விழுந்து ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டில்லி பல்கலை, மாநகராட்சி நிர்வாகம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெற்கு டில்லியின் சத்யா நிகேதன் பகுதியில், 50 ஆண்டுகள் பழமையான ஐந்து மாடி கட்டடத்தில் இயங்கி வந்த ஆண்களுக்கான ஹாஸ்டல், கடந்த 6ம் தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வலுவான அஸ்திவாரம் இல்லாமல் கூடுதலாக நான்கு தளங்கள் கட்டியதே விடுதி கட்டடம் இடிந்து விழ காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதே சமயம் சட்டவிரோத கட்டுமானங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாணவர்கள் தங்கும் தனியார் ஹாஸ்டல் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டுதல்களை உருவாக்க கோரியும் டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக டில்லி பல்கலை நிர்வாகம், மாநகராட்சி மற்றும் டில்லி வளர்ச்சி அதிகார அமைப்பு பதில் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. கல்லுாரி விடுதிகள் போதிய அளவுக்கு இல்லாத சூழலை தனியார் விடுதி உரிமையாளர்கள் தவறாக பயன்படுத்தி, அனுமதி பெறாத கட்டடங்களில் மாணவர்கள் தங்க வைப்பதையும், பாதுகாப்பு விதிகளை காற்றில் பறக்கவிடுவதையும் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்த பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.