ஏர் இந்தியாவி।ல் பாதுகாப்பு குறைபாடு டி.ஜி.சி.ஏ., நடத்திய ஆய்வில் அம்பலம்
புதுடில்லி: 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, 100 பாதுகாப்பு குறைபாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கண்டறிந்துள்ளது. குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த, 'ஏர் இந்தியா' விமான விபத்து குறித்து மத்திய அரசு அமைத்த குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையில், 'விமானம் புறப்பட்டவுடன் இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், 'ரன்' நிலையில் இருந்து, 'கட் ஆப்' நிலைக்கு மாறியதே விபத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தின் பாதுகாப்பு குறித்து டி.ஜி.சி.ஏ., எனப்படும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்துள்ளது. இதுகுறித்து டி.ஜி.சி.ஏ., வெளியிட்ட அறிக்கை: விபத்துக்குள்ளான, 'ஏர் இந்தியா'வின், 'போயிங் - 787' ரக விமானங்கள் உட்பட மற்ற விமானங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில், 100 பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், ஏழு குறைபாடுகள் மிகவும் தீவிரமானவை. இவைதவிர, விமானிகளுக்கு போதுமான பயிற்சி இல்லாதது, போதுமான பணியாளர்கள் இன்றி விமானங்கள் இயக்கப்பட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளன. சவால் நிறைந்த விமான நிலையங்களை அணுகும்போது பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல் விமானங்களை தரையிறக்குவதும் அதிகரித்துள்ளன. இத்தகைய குறைபாடுகளை சரி செய்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, 'ஏர் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வின்படியே, எங்கள் நிறுவன விமானங்களில் டி.ஜி.சி.ஏ., அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது. 'அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சரிபார்ப்பு நடவடிக்கைகளின் விபரங்களுடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் எங்கள் பதிலை சமர்ப்பிப்போம்' என, குறிப்பிட்டுள்ளது.