ஓட்டளிக்க பீஹார் ஊழியர்களுக்கு லீவு கொடுங்கள்: கட்டுமான நிறுவனங்களுக்கு காங். வலியுறுத்தல்
பெங்களூரு: பீஹாரைச் சேர்ந்த ஊழியர்கள் சொந்த மாநிலத்தில் ஓட்டளிக்க தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தி உள்ளார்.பீஹார் சட்டசபைக்கான முதல்கட்ட ஓட்டுப்பதிவு நவ.6ம் தேதி நடக்கிறது. தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் பீஹார் மக்கள், சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.இந் நிலையில், பீஹாரைச் சேர்ந்த ஊழியர்கள் ஓட்டு போடும் வகையில் அவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தி உள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாநிலத்தில் உள்ள பிற நிறுவனங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து டி.கே. சிவகுமார் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது; கர்நாடகாவில் பணிபுரியும் பீஹார் மக்கள் இண்டி கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தேஜஸ்வி யாதவ் முதல்வராகவும், ராகுல் பிரதமராகவும் வருவதை பார்ப்பதே எங்களின் குறிக்கோள். பீஹாரைச் சேர்ந்த ஊழியர்கள் சொந்த ஊருக்குச் சென்று ஓட்டுப்போட அவர்களுக்கு இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பினரும், மாநிலத்தில் உள்ள பிற நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும்.,இவ்வாறு அவர் கூறினார்.