வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 58 லட்சம் பேர் நீக்கம் மேற்கு வங்கம்
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதில், இறப்பு, இடப்பெயர்வு, கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக, 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தமிழகத்துடன் சேர்த்து இம்மாநிலத்துக்கு அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, மேற்கு வங்கத்தின் 294 சட்டசபை தொகுதிகளிலும், எஸ்.ஐ.ஆர்., பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. நவ., 4 - டிச., 11 வரை நடந்த எஸ்.ஐ.ஆர்., பணியில், வீடு வீடாகச் சென்று ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்தனர். மேலும், உரிய ஆவணங்களுடன் கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தினர். ஆளும் திரிணமுல் காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த பணி நடந்தது. மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி முடிந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதில், இறப்பு, இடப்பெயர்வு, கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக, 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், மேற்கு வங்கத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 7.66 கோடியில் இருந்து 7.08 கோடியாக குறைந்துள்ளது. நீக்கப்பட்டவர்களில், 24.17 லட்சம் பேர் இறந்தவர்கள்; 19.88 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் 12.20 லட்சம் பேர் முகவரியில் வசிக்காதவர்கள் அல்லது தொடர்பு கொள்ள முடியாதவர்கள். மேலும், 1.38 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர்களாக இருந்ததாலும், 1.83 லட்சம் பேரை அடையாளமே காண முடியாததாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 58 லட்சம் வாக்காளர்களின் விபரங்கள், தொகுதி வாரியாக தேர்தல் கமிஷன் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. 'வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளர்கள், படிவம் - 6 மற்றும் உரிய ஆவணங்களுடன், ஜன., 16 வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.இறுதி வாக்காளர் பட்டியல், பிப்., 14ல் வெளியாகிறது.
ராஜஸ்தானில் 42 லட்சம் பேர்
முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் ராஜஸ்தானிலும், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில், இறப்பு, இடப் பெயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக, 41.79 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில், 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள்; 29.6 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள்; 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவு செய்தவர்கள். வரைவு பட்டியலில் இருந்து, 41.79 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, ராஜஸ்தான் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 5.47 கோடியில் இருந்து, 5.05 கோடியாக குறைந்துள்ளது. இதே போல், கோவாவில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 1 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளனர்.