மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடும் படையப்பா யானை;வனத்துறையினர் எச்சரிக்கை
மூணாறு; படையப்பா யானைக்கு மதம் பிடித்த அறிகுறி தென்படுவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு வனத்துறையினர் முன்னெச்சரிக்கை விடுத்தனர்.மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலமாகும். இந்த யானையை காண சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. மிகவும் சாதுவான படையப்பா தீவனத்தை தேடி காடுகளுக்கு செல்வதில்லை. மாறாக ரோட்டோரக் கடைகளை குறிவைத்து நடமாடும்.குறிப்பாக மூணாறு ,உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் முதல் வாகுவாரை எஸ்டேட் வரை 25 கி.மீ., தொலைவு வரை சென்று திரும்பும். அது போன்று மூணாறு அருகே முக்கிய சுற்றுலா பகுதியான மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட், குண்டளை அருவிக்காடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதுண்டு. அறிகுறி
தற்போது படையப்பாவின் கண், காது இடையே மதநீர் சுரந்து மதம் பிடித்ததற்கான அறிகுறி தென்படுகிறது. அதனை உறுதி செய்த வனத்துறையினர் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை விடுத்தனர். சேதம்
ஆண் யானைகளுக்கு பாலுணர்வு தொடர்பாக மதநீர் சுரக்கும் போது ஆக்ரோஷமாகவும், ஆபத்தாகவும் காணப்படும் என்பதால் மதம் பிடித்து விட்டதாக கூறுகின்றனர். கடந்தாண்டு படையப்பாவுக்கு மதம் பிடித்தபோது 30க்கும் மேற்பட்ட வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தியது குறிப்பிடதக்கது.