போலி கால்சென்டர் நடத்தி வெளிநாட்டினரிடம் மோசடி; குஜராத் வாலிபர்கள் 3 பேர் கைது
வதோதரா: குஜராத்தில், சர்வதேச அளவில் போலி கால்சென்டர் நடத்தி 80 வெளிநாட்டினரிடம் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.இதுபற்றிய விவரம் வருமாறு; வதோதராவில் ஒரு பங்களா ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட பங்களாவில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அந்த பங்களாவில் இருந்த 3 வாலிபர்கள்,அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டதாக கூறி ஒரு போலியான கால் சென்டர் ஒன்றை நடத்தி உள்ளனர். இதன் மூலம் வெளிநாட்டினர் 80 பேரை நம்ப வைத்து ரூ.30 லட்சம் வரை மோசடி செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது; மொத்தம் 3 பேரை கைது செய்துள்ளோம். இதில் ராவத் மற்றும் அன்ஷ் பான்ஞ்சல் இருவரும் இன்ஜினியர்கள் ஆவர். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஒரு சர்வதேச போலி கால் சென்டரை நடத்தி உள்ளனர். இந்த கால் சென்டர் மூலம் கடன் தருவதாக கூறி அமெரிக்கா, பிரிட்டனில் உள்ளவர்களை நம்ப வைத்துள்ளனர். கடன் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாக கூறி அதற்கான போலியான ஒப்புதல் கடிதத்தையும் தயாரித்து வினியோகித்துள்ளனர். தங்களுக்கு 20 சதவீதம் கமிஷன் தந்தால் உடனடியாக பணத்தை விடுவிப்பதாக கூறி வசூல் செய்துள்ளனர். நுனிநாக்கு ஆங்கிலம், தொழில்நுட்ப அறிவு காரணமாக இவர்கள் கூறுவதை நம்புவோர் பணத்தை அனுப்பி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 மாதங்களில் மட்டுமே வெளிநாட்டினர் 80 பேரை ஏமாற்றி உள்ளனர். மொத்தம் ரூ.30 லட்சம் மோசடி செய்துள்ளனர். முழு விசாரணைக்கு பின்னரே அனைத்து விவரங்களும் தெரியவரும். 3 பேரிடமும் இருந்து 6 செல்போன்கள், ஏராளமான லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இவ்வாறு போலீசார் கூறினர்.