வேலை வாங்கித்தருவதாக மோசடி: ஹரியானாவில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது
குருகிராம்: வேலை மற்றும் இடமாற்றம் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.ஹரியானாவில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து பலரிடம் வேலை வாங்கித்தருவதாகவும், இடம் மாறுதல் செய்து தருவதாக கூறிவரும் நபர் குறித்து, தகவல் கிடைத்ததும், செக்டார் 22ஏ இல் உள்ள ஒரு வீட்டை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின்போது 2வது மாடி வராண்டாவில் நின்றிருந்த அந்த நபர் தப்பி ஓட முயன்றபோது போலீசார் அவரை பிடித்தனர்.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:பிடிப்பட்டவர் ஜெய் பிரகாஷ் பதக் 31, என அடையாளம் காணப்பட்டார். பதக், உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தின் ரகுய்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அவர் குருகிராமில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் பலரை வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி உள்ளார். அவர் 12 ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளார். இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து, தனது பதவியைப் பற்றி பெருமையாகப் பேசி, வேலைகள் அல்லது இடமாற்றங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி தனிநபர்களிடமிருந்து பணம் பறித்து வந்துள்ளார்.தனது குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக இந்த மோசடியைச் செய்தது தெரியவந்தது., போலி அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து மூத்த அதிகாரியுடன் தொடர்புடையது போல் நடித்து ஏமாற்றியதற்காக உத்தரபிரதேசம் மாநிலம் பாலம் விஹார் நிலையத்தில்அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் இருந்த ரூ.2.5 லட்சம் ரொக்கம், உள்துறை அமைச்சக அடையாள அட்டை உட்பட பல போலி அடையாள ஆவணங்கள், மூன்று ஆதார் அட்டைகள், கூடுதல் ஆய்வாளரை மாற்றுவது தொடர்பான கடிதம், போலி ஆயுத உரிமம், ஆயுஷ்மான் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், இரண்டு சீல்கள், ஆறு மொபைல் போன்கள், ஒரு மடிக்கணினி, ஒரு வாக்கி டாக்கி செட் ஆகியவை அவரிடம் இருந்து மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து பதக், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இரண்டு நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு போலீசார் கூறினர்.