மாடுகளை பாதுகாக்க பேஷன் ஷோ கர்நாடகாவில் புதிய முயற்சி
பெங்களூரு: கர்நாடகாவில், 'ஹூலிகர்' இன மாடுகளை பாதுகாக்கும் வகையில் 'பேஷன் ஷோ' நடத்தப்பட்டது. இதுவரை பெண்களுக்கான அழகுப் போட்டி, ஆண்களுக்கான உடற்கட்டமைப்பு போட்டி, நாய் கண்காட்சி, குதிரை வண்டி பிரியர்களால் குதிரை வண்டி பேஷன் ஷோக்களும் நடத்தப் பட்டுள்ளன. விஜயதசமியையொட்டி, கர்நாடகாவின், தொட்டபல்லாபூரின் தொட்ட திம்மனஹள்ளி கிராமத்தில், 'ஹூலிகர்' இன மாடுகளை பாதுகாக்கும் வகையில் 'பேஷன் ஷோ' போட்டி முதன் முறையாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக பெங்களூரு நகரம், பெங்களூரு தெற்கு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், சித்ரதுர்கா உட்பட பல மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஜோடி மாடுகளும் வித்தியாசமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. இப்போட்டியில், பெங்களூரு பொம்மசந்திரா மஞ்சுநாத்துக்கு சொந்தமான மாடுகள், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு, புதிய இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
'ஹூலிகர்' இன மாடுகள்?
கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது, 'ஹூலிகர்' இன மாடுகள். இம்மாடுகள் நிலத்தை உழுதல், வண்டி ஓட்டுதல், மாட்டு வண்டியுடன் வேலை செய்தல் என, அனைத்து வகையான கடினமான விவசாய பணிகளையும் செய்யக்கூடிய அளவில் பலம் வாய்ந்தவை. இவை நல்ல தரமான பாலும் தருகின்றன. கூடுதலாக இந்த இனத்தின் காளைகள், கண்காட்சிகள் மற்றும் மாட்டு வண்டிப் போட்டிகளில் பங்கேற்கின்றன. தற்போதைய காலகட்டத்தில், விவசாய பணிகள், இயந்திரங்கள் பயன்படுத்துவதால், இந்த இன மாடுகள் மெல்ல அழிந்து வருகின்றன. பால் உற்பத்திக்காக கலப்பு இனங்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, நம் கலாசாரத்தின் பெருமையான ஹூலிகர் இனத்தை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.