மாஜி அமைச்சரை கொன்றவர் நாடு கடத்தல்: ஏர்போர்ட்டில் கைது செய்தது என்.ஐ.ஏ.,
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அன்மோல் பிஷ்னோய், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். டில்லி விமான நிலையத்தில் அவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த ஆண்டு அக்டோபரில் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக, 2022ல் பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலா கொலை செய்யப்பட்டார். இந்த இரு கொலை வழக்குகளிலும், பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் அன்மோலுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில், வெளிநாடு தப்பியதாக கிடைத்த தகவலை அடுத்து, அன்மோலை கைது செய்ய, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசார், 'ரெட் கார்னர்' நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்நிலையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு போலீசாரால் அன்மோல் கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த 2020 முதல் 2023 வரையிலான காலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் அன்மோலுக்கு தொடர்பு இருப்பதாக, 2023 மார்ச்சில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தது. இவருக்கு சித்திக் கொலை வழக்கு உட்பட, 18 வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும் என்.ஐ.ஏ., தெரிவித்தது. இந்நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, நேற்று முன்தினம் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், அன்மோலை நாடு கடத்தியது. நேற்று பகலில் டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்; பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மாலை அவரை ஆஜர்படுத்தினர்.