உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நண்பன், கட்சிக்கு நடுவில் சிக்கித் தவிக்கும் லட்சுமண் சவதி

நண்பன், கட்சிக்கு நடுவில் சிக்கித் தவிக்கும் லட்சுமண் சவதி

கர்நாடக அரசியல்வாதிகள் சற்று வித்தியாசமானவர்கள். பதவி, அதிகாரம் கிடைக்காவிட்டால், கட்சி மாறுவதில் கை தேர்ந்தவர்கள். இதனால் அவர்களை 'ஜம்பிங் ஸ்டார்' என்று அழைத்தால் மிகையாகாது.பா. ஜ.,வில் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை அலங்கரித்த ஜெகதீஷ் ஷெட்டர், துணை முதல்வராக இருந்த லட்சுமண் சவதி ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சீட் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.லட்சுமண் சவதி எம்.எல்.ஏ., ஆனார். ஜெகதீஷ் ஷெட்டரால் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. ஆனாலும் அவருக்கு எம்.எல்.சி., பதவி வழங்கப்பட்டது. அந்தப் பதவியை உதறித் தள்ளிவிட்டு மீண்டும் பா.ஜ.,வுக்கு சென்றுவிட்டார்.

தக்கவைப்பு

லட்சுமண் சவதியும் மீண்டும் பா.ஜ., பக்கம் சென்று விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரிடம் பேசி, கட்சியிலே தக்கவைத்தனர் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும்.பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமண் சவதி, சிக்கோடி பகுதியில், லிங்காயத் சமூக தலைவராக விளங்குகிறார். லோக்சபா தேர்தலில் லட்சுமண் சவதி உதவியுடன் சிக்கோடி தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டம் வைத்துள்ளது.ஆனால் சிக்கோடி பா.ஜ., வேட்பாளர் அன்னாஜாஹெப் ஜொல்லே, லட்சுமண் சவதியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

அமைச்சர் மகள்

காங்கிரஸ் சார்பில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா களம் இறக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.சதீஷ் ஜார்கிஹோளிக்கும், லட்சுமணன் சவதிக்கும் அரசியல் ரீதியாக நல்லுறவு இல்லை. இதனால் சதீஷ் மகளை வெற்றி பெற வைக்க, லட்சுமண் சவதி தீவிர பிரசாரம் செய்வது சந்தேகம் தான்.ஆனால் கட்சி மேலிடம் கூறினால் பிரசாரம் செய்து தான் ஆக வேண்டும். இதற்காக நண்பனுக்கு எதிராக அவர் கண்டிப்பாக பேச வேண்டிய, சூழ்நிலை வரும்.இதனால் நண்பனா, கட்சியா என்ற குழப்பத்தில் லட்சுமண் சவதி உள்ளார்.சதீஷ் ஜார்கிஹோளிக்கும், பா.ஜ.,வில் உள்ள அவரது அண்ணன் ரமேஷ் ஜார்கிஹோளிக்கும் அரசியல் ரீதியாக பிரச்சனை உள்ளது. இதனால் அவர்கள் ரெண்டு பேரும் பேசிக் கொள்வதில்லை. ஆனாலும் இருவரின் பிள்ளைகளும் ஒற்றுமையாக இருக்கின்றனர்.ஒருவேளை சிக்கோடி வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்பட்டால், தனது பெரியப்பாவை சந்தித்து ஆசிபெறத் தயாராகி வருகிறார்.மகளுக்கு ஆதரவாக ரமேஷ் ஜார்கிஹோளி மறைமுகமாக பிரசாரம் செய்யவும் வாய்ப்பு உள்ளது. இதனால் சிக்கோடியில் லோக்சபா தொகுதியில் அனல் பறக்க போவது உறுதியாகி உள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ