ஒரு நாள் சுற்றுலா பிரியர்களுக்கோர் நற்செய்தி துரஹள்ளி வனப்பகுதி
நகரத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லாமலேயே, பெங்களூரின் அருகே, ஒரு அருமையான சுற்றுலா தலம் உள்ளது. ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற பக்காவான 'டூரிஸ்ட் ஸ்பாட்' தான், துரஹள்ளி வனப்பகுதி.பெங்களூரில் ஐ.டி., போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், சுற்றுலா செல்வதற்கு நண்பர்களுடன் இணைந்து திட்டம் போடுவர். ஆனால், யாராவது ஒருவர் கடைசி நேரத்தில் அலுவலகத்தில் விடுப்பு கொடுக்கவில்லை என்று சொல்லி விடுவதால், திட்டம் கேன்சலாகி விடும். டூரிஸ்ட் ஸ்பாட்
அனைவரும் அலுவலகத்தில் ஒரே நாளில் விடுப்பு எடுத்து, சுற்றுலா செல்வது முடியாத காரியம் தான். அதற்காக யாரும் வருத்தப்பட தேவையில்லை. அலுவலகத்தில் விடுப்பு எடுக்காமல், ஒரே ஒரு விடுமுறை நாளில் சுற்றுலா செல்ல ஏற்ற ஒரு தரமான 'டூரிஸ்ட் ஸ்பாட்' தான் துரஹள்ளி வனப்பகுதி.பெங்களூரில் உள்ள மிகப்பெரிய வனப்பகுதிகளில் ஒன்றான துரஹள்ளி வனப்பகுதி, 590 ஏக்கரில் அமைந்து உள்ளது. எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள், பறவைகளின் ஓசை என காடு செழிப்பாக இருக்கிறது. பல வகையான பூக்கள் பூத்து குலுங்குகிறது. நடந்து செல்ல சிரமமாக இருக்கும் என்பதால், சைக்கிளில் செல்லலாம். அங்கு உள்ள தார் சாலைகளில், சைக்கிளை ஜாலியாக ஓட்டி செல்லலாம். பசுமையான இடங்களை பார்த்து மெய் சிலிர்க்கலாம்.வனத்தின் மையப்பகுதியில் பாறைகள் அடுக்கப்பட்டது போன்று, ஒரு சிறிய மலைப்பகுதி உள்ளது. இங்கிருந்து கீழே பார்த்தால், உயரமான கட்டடங்களை பார்த்து ரசிக்கலாம். இதில் உள்ள சிறிய குளம் பார்ப்பதற்கே பரவசமாய் இருக்கும். இந்த காட்டில் சனீஸ்வரனுக்கு என ஒரு கோவிலும் உள்ளது. மயில்கள் அதிகமாக காணப்படும். சிறுத்தை நடமாடுவதாகவும் செய்திகள் பரவுவது வழக்கம். இதனால், சுற்றுலா செல்வோர், பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.பெங்களூரில் மீதமிருக்கும் கடைசி வனப்பகுதி இதுதான்.பனசங்கரியிலிருந்து இருந்து 15 கி.மீ., துாரத்தில் துரஹள்ளி வனப்பகுதி உள்ளது. அரை மணி நேரத்தில் சென்று அடையலாம். வனப்பகுதியை சுற்றி ஏராளமான நுழைவு வாயில்கள் உள்ளன. இதை சுற்றி இரும்பு கம்பிகளால் ஆன வேலி அமைக்கப்பட்டு உள்ளது. காலை 5:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பு காரணங்களுக்காக, மதியம் 3:00 மணியிலிருந்து சுற்றுலா பயணியர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
செல்வது?
மெட்ரோ ரயில்: மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சில்க் இன்ஸ்டிடியூட் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து ஆட்டோ, டாக்சியில் துரஹள்ளி வனப்பகுதிக்கு சென்று விடலாம்.பஸ்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து பி.எம்.டி.சி., பஸ்சில் தலகட்டாபுரா செலல வேண்டும். அங்கிருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள துரஹள்ளி வனப்பகுதிக்கு செல்லலாம். - நமது நிருபர் -