UPDATED : ஜன 25, 2025 03:03 PM | ADDED : ஜன 25, 2025 02:59 PM
லக்னோ: சைக்கிளில் நேபாளம் புறப்பட்ட இரண்டு பிரெஞ்சு சுற்றுலா பயணிகள், 'கூகுள் மேப்'பில் காட்டிய தவறான வழியால், உ.பி.,யில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.கூகுள் மேப் பார்த்து வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் அடிக்கடி நேர்ந்து வருகிறது. ஒருபக்கம், மேப் பார்த்து வாகனங்களை இயக்கி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மறுபக்கம் 'கூகுள் மேப்'பால் சிலர் தவறான வழியில் இரவு நேரங்களில் சிக்கி பரிதவிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில், சைக்கிளில் நேபாளத்திற்கு சென்ற, இரண்டு பிரெஞ்சு சுற்றுலா பயணிகள், 'கூகுள் மேப்'பில் காட்டிய தவறான வழியால் உ.பி.,யில் சிக்கி தவித்தனர். உத்தர பிரதேச மாநிலத்தில் பரேலியில் உள்ள ஒரு கிராமத்தில், நள்ளிரவில் வழி தெரியாமல் பதற்றத்துடன் இருந்தனர். அவர்களை கண்ட கிராம மக்கள் அவர்களிடம் என்ன பிரச்னை என்று கேட்டுள்ளனர். பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள் பேசிய மொழி கிராம மக்களுக்கு புரியவில்லை. பின்னர் அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும் பிரெஞ்சு நாட்டு சுற்றுலா பயணிகள் என்பது தெரியவந்தது.அவர்கள், சைக்கிளில் நேபாளத்திற்கு செல்வதற்கு, 'கூகுள் மேப்' காட்டிய குறுக்கு வழியை பார்த்து வந்துள்ளதால், வழி மாறி வந்துள்ளனர் என்பதை அறிந்த போலீசார் உதவி செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: சுற்றுலாப் பயணிகளான பிரையன் ஜாக் கில்பர்ட் மற்றும் செபாஸ்டியன் பிராங்கோயிஸ் கேப்ரியல் தனக்பூர் வழியாக நேபாளத்தில் உள்ள காத்மாண்டு செல்ல திட்டமிட்டு இருந்துள்ளர். கூகுள் மேப் அவர்களுக்கு பரேலியில் உள்ள பஹேரி வழியாக குறுக்கு வழியைக் காட்டி உள்ளது. அதனால் அவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சுரைலி அணையை அடைந்தனர். இருவரும் ஒரு வெறிச்சோடிய சாலையில் சைக்கிளில் சுற்றித் திரிவதை கிராம மக்கள் பார்த்தபோது, அவர்களின் மொழி புரியவில்லை. அவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு மக்கள் அழைத்து வந்தனர். அவர்களுக்கு இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி அனுராக் ஆர்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், பிரெஞ்சு சுற்றுலா பயணிகளை நேரில் வந்து சந்தித்து பேசினார். அவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.