உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குளிர்கால கூடாரங்கள் அமைக்க டெண்டர் கோரியது அரசு

குளிர்கால கூடாரங்கள் அமைக்க டெண்டர் கோரியது அரசு

புதுடில்லி:வீடற்றவர்கள் குளிர்காலத்தில் தங்குவதற்காக, எளிதில் சேதம் அடையாத பகோடா பாணி தற்காலிக கூடாரங்கள் அமைக்க, அரசு டெண்டர் கோரியுள்ளது. தலைநகர் டில்லியில் நவம்பர் இறுதியில் இருந்து ஜனவரி கடுங் குளிர் நிலவும். அண்டை மாநிலங்களில் இருந்து வந்து டில்லியில் கூலி வேலை பார்க்கும் ஏராளமான தொழிலாளர்கள் சாலையோரத்திலேயே தங்கியுள்ளனர். வீடற்ற இந்தத் தொழிலாளர்கள் கடுங்குளிர் காலத்தில் தங்குவதற்கு டில்லி அரசு ஆண்டு தோறும் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தருகின்றன. இந்த ஆண்டு பருவமழை நிறைவடைந்த நிலையில், கடுங்குளிர் காலம் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: குளிர்காலத்தில் வீடற்ற தொழிலாளர்கள் தங்குவதற்கு, டில்லி முழுதும் 250 ஐரோப்பிய மற்றும் ஜெர்மன் பாணி பகோடா கூடாரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. முகாம், கண்காட்சிகளுக்கு அமைப்பது போல நீர் புகாத மற்றும் தீப்பற்றாத பகோடா கூடாரங்கள் அல்லது ஹேங்கர்கள் அமைக்க விலைப்புள்ளி கேட்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக கூடாரத்தில் ஒரு மர மேடை தளம், படுக்கைகள், மெத்தைகள், முதலுதவி பெட்டி, தீத்தடுப்பு கருவிகள், ரீசார்ஜ் செய்யக்கூடிய எல்.இ.டி., விளக்குகள் மற்றும் இதர அனைத்து வசதிகளும் செய்ய வேண்டும். ஏலதாரர்களுக்கு, முன்பணம் வைப்புத்தொகை 7 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் 120 நாட்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும். கூடாரத்தின் தரம் மற்றும் பராமரிப்பை வாரியத்தின் துணை இயக்குனர் அடிக்கடி ஆய்வு செய்வார். குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதை இரண்டு நாட்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ