உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5ம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்கும் முயற்சியில் அரசு தீவிரம்

5ம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்கும் முயற்சியில் அரசு தீவிரம்

புதுடில்லி:நம் நாட்டின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்கும் முயற்சியை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணியை கைப்பற்ற, ஏழு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன. நம் அண்டை நாடுகளால் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், எல்லைகளை பாதுகாக்கும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களை படைகளில் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சுயசார்பு கொள்கையின்படி நம் நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் அதிநவீன நடுத்தர மேம்பட்ட போர் விமானங்களை வடிவமைத்து வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்ற, 'எல் அண்ட் டி., ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட், அதானி டிபென்ஸ்' உட்பட ஏழு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் அளிக்கும் திட்ட மதிப்பீட்டின்படி, 'பிரம்மோஸ்' ஏவுகணை திட்டத்தலைவர் சிவதாணு பிள்ளை தலைமையிலான குழு ஆய்வு செய்து, ராணுவ அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யும். இதில், இரண்டு நிறுவனங்களை இறுதிசெய்து ஒப்பந்தத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு சக்திவாய்ந்த இன்ஜின்களுடன், ஒருவர் மட்டுமே இயக்கக்கூடிய வகையில், உட்புறத்தில் 1,500 கிலோ எடையிலும், வெளிப்புறத்தில் 5,500 கிலோ எடையிலான வெடிப்பொருட்களை எடுத்து செல்லவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர 6,500 கிலோ எடையிலான எரிபொருளை கொண்டு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும். ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை, இந்திய விமானப்படையில் 2035க்கு முன் இணைக்கும் நோக்கில் 125 போர் விமானங்களை தயாரிக்க, 2 லட்சம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இவ்வகை போர் விமானங்களை, அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. விரைவில், இப்பட்டியலில் இந்தியாவை இணைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை