உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் சக்சேனா சதி பரத்வாஜ் குற்றச்சாட்டு

கவர்னர் சக்சேனா சதி பரத்வாஜ் குற்றச்சாட்டு

புதுடில்லி:“பொய் வழக்கில் என்னைச் சிக்க வைக்க துணைநிலை கவர்னர் சக்சேனா சதி செய்கிறார்,”என, முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநில தலைவருமான சவுரவ் பரத்வாஜ் கூறினார். முன்னாள் அமைச்சரான சவுரவ் பரத்வாஜ் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத் துறையினர் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். இதுகுறித்து, சவுரவ் பரத்வாஜ் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் காலை 7:15 மணிக்கு என் வீட்டுக்கு வந்தனர். வீடு முழுதும் சோதனையிட்டனர். அதைத் தொடர்ந்து, என் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய, 43 கேள்விகள் கேட்டனர். அனைத்துக் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். என் வாக்குமூலத்தை பதிவு செய்த பின், அதை யாருக்கோ அனுப்பினர். அங்கிருந்து பதில் வந்தவுடன், என் வாக்குமூலத்தின் ஒரு பகுதியை நீக்கச் சொன்னார்கள். அதற்கு நான் மறுத்தேன். அப்போது அதிகாரிகள் என்னிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால், என்னைக் கைது செய்வார்களோ என்று என் குடும்பத்தினருக்கு அச்சம் ஏற்பட்டது. அமலாக்கத்துறை இப்படித்தான் செயல்படுகிறது. உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துகின்றனர். தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் கேட்டு வற்புறுத்துகின்றனர். குடும்பத்தினரை நம் கண் முன்பே அச்சுறுத்துகின்றனர். கடந்த, 2023ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றேன். மார்ச் 22ம் தேதி அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத் துறை திட்டங்களில் ஏற்பட்ட தாமதம் குறித்து விவாதித்து பல உத்தரவுகளை பிறப்பித்தேன். ஆனால், நான் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த விடாமல் துணைநிலை கவர்னர் சக்சேனா சதி செய்தார். இப்போது, பொய் வழக்கில் என்னைச் சிக்க வைக்க சக்சேனா சதி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை