உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ரயில், விமான சேவை ரத்து; பாதிப்பு ! மக்கள் அவதி

ஜம்மு - காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ரயில், விமான சேவை ரத்து; பாதிப்பு ! மக்கள் அவதி

ஸ்ரீநகர் ஜம்மு - காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டதால், பயணியர் அவதி அடைந்தனர்.ஜம்மு - காஷ்மீரில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில், சராசரியாக மைனஸ் 5 டிகிரி செல்ஷியசுக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகி வருகிறது.ஸ்ரீநகரில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான தால் ஏரியின் மேற்பரப்பு, பனிப்பொழிவால் உறைந்துள்ளது. ஸ்ரீநகர், கந்தர்பால், புத்காம், புல்வாமா, பந்திபோரா உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு பனிப்பொழிவு நிலவுகிறது.

இயல்பு வாழ்க்கை

பனிப்பொழிவை சுற்றுலா பயணியர் ரசித்தாலும், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பனிப்பொழிவால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதி அடைந்தனர்.முக்கிய சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

மோசமான வானிலை

அதிக பனிப்பொழிவால், ஜம்மு- - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இதே போல், பனிஹால்- - பாரமுல்லா இடையேயான ரயில் பாதையில், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தண்டவாளங்களில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. பயணம் மேற்கொள்ள முடியாததால், பயணியர் கடும் அவதி அடைந்தனர். ஓடுபாதையில் பனியை அகற்றும் பணி நடந்து வருவதாகவும், வானிலை சீரான பின் விமான சேவை துவங்கும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மணாலியில் 5,000 பேர் மீட்பு

ஹிமாச்சல பிரதேசத்திலும் இதுவரை இல்லாத வகையில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சிம்லா, மணாலி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணியர் குவிகின்றனர். குலுவில் உள்ள சோலாங் நாலா என்ற பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவும் நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு சென்ற 5,000 பேர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். இந்த தகவலை அறிந்த போலீசார், சோலாங் நாலாவில் சிக்கித் தவித்த 5,000 சுற்றுலா பயணியரை நேற்று பத்திரமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை