ஹீலியம் சிலிண்டர் வெடித்து 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி
மைசூரு: பலுானுக்கு காற்று அடைத்த போது, ஹீலியம் சிலிண்டர் வெடித்து, இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பலியாகி உள்ளனர். மைசூரு அரண்மனை, வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிப்பதால், இதனை காண ஏராளமானோர் தினமும் வருகின்றனர். அரண்மனையின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில், குழந்தைகளை கவரும் வகையில், வெளிமாநிலத்தினர் பலுான் விற்பனையில் ஈடுபடுகின்றனர். நேற்று இரவு பலுான் வியாபாரி ஒருவர், பலுானுக்கு ஹீலியம் சிலிண்டர் மூலம் காற்று அடைத்தார். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியதில், பலுான் வியாபாரி சம்பவ இடத்திலும், அருகிலிருந்த இரண்டு பெண்கள் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலும் இறந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்தவர்களின் பெயர், விபரம் தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்தது போன்று காட்சி அளித்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.