போதை பொருள் வழக்கில் ஹேமாவிடம் விசாரிக்க தடை
பெங்களூரு; போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், தெலுங்கு நடிகை ஹேமாவிடம் விசாரிக்க, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.பெங்களூரு, ஹெப்பகோடியில் கோபால் ரெட்டி என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில், கடந்த ஆண்டு மே 19ம் தேதி ரேவ் பார்ட்டி நடந்தது. இதில் தெலுங்கு நடிகை ஹேமா, 52 உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலில், சி.சி.பி., போலீசார் ரெய்டு நடத்தினர்.சில போதைப் பொருட்கள் சிக்கின. பார்ட்டியில் பங்கேற்றவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை அறிக்கையில் ஹேமா உள்ளிட்டோர், போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிந்தது.இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி ஹேமா கைது செய்யப்பட்டார். 10 நாட்கள் சிறைவாசத்திற்கு பின், ஜாமினில் வெளியே வந்தார். போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நலையில், தன் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் ஹேமா மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி ஹேமந்த் சந்தன கவுடர் விசாரிக்கிறார்.நேற்று மனு மீது விசாரணை நடந்தது. ஹேமா தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், 'இந்த வழக்கில் எனது மனுதாரரை சிக்க வைத்து உள்ளனர். அவர் போதை பொருள் பயன்படுத்தவே இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமும் இல்லை' என்று வாதிட்டார்.இதையடுத்து ஹேமா மனு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி ஹேமந்த் சந்தன கவுடர் உத்தரவிட்டார். அதுவரை ஹேமாவிடம் விசாரிக்கவும் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.