மருத்துவ உபகரணங்கள் வாங்கிய வழக்கில் அவசர நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
பெங்களூரு: கொரோனா நேரத்தில், முகக்கவசம், பாதுகாப்பு கவச உடை வாங்கிய முறைகேடு தொடர்பான மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மனுதாரர் நிறுவனங்கள் மீது கெட்ட நோக்கத்துடன், அவசர நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது.கொரோனா தொற்று பரவியபோது, அதை கட்டுப்படுத்த அன்றைய பா.ஜ., அரசு 'என் - 95' முகக் கவசங்கள் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்தது. இத்தகைய பொருட்கள் வாங்கியதில், பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வந்தது.இதுகுறித்து, விசாரணை நடத்தும்படி மருத்துவ கல்வி இயக்குனரக தலைமை கணக்கு அதிகாரி விஷ்ணு பிரசாத், விதான்சவுதா போலீஸ் நிலையத்தில் 13ம் தேதி புகார் செய்தார்.போலீசாரும் புகார் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, புரோடென்ட் மானேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், லாஜ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.மனு மீது நீதிபதி நாக பிரசன்னா விசாரணை நடத்தி வாதம், பிரதி வாதங்களை கேட்டறிந்தார். இந்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதில், 'இந்த வழக்கில் மனுதாரர்கள் மீது, தவறான நோக்கத்துடன் அல்லது அவசரமாகவோ நடவடிக்கை எடுக்கக் கூடாது. மருத்துவ உபகரணங்கள் வாங்கியதற்கான பாக்கி தொகையை கொடுப்பதில் இருந்து தப்பிக்கும் நோக்கில், அரசு புகார் அளித்திருந்தால் கடுமையாக கருதப்படும். தற்போதைக்கு மனுதாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்' என கூறினார்.வழக்கு தொடர்பாக மருத்துவ இயக்குனரக தலைமை கணக்கு அதிகாரிக்கும், மருத்துவ கல்வித்துறை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.