ஹூப்பள்ளி கலவர வழக்குகள்; கோர்ட் அனுமதித்தால் வாபஸ்
பெங்களூரு: ''சட்டத்துக்கு உட்பட்டு தான் ஹூப்பள்ளி கலவர வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு அரசு வந்துள்ளது. நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே இந்த வழக்கு வாபஸ் பெறப்படும்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கலவரம் உள்ளிட்ட வழக்குகளை திரும்பப் பெற யாராவது கோரிக்கை விடுப்பர். அதை பரிசீலனை செய்ய அமைச்சரவை துணைக்குழு அமைக்கப்படும். சம்பந்தப்பட்ட துறையிடம்விபரம் கேட்போம்.பின், அமைச்சரவை துணைக்குழு, வழக்கை வாபஸ் பெறலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும். ஹூப்பள்ளி கலவரம் வழக்கில், இத்தனை பேர் மீது வழக்குகள் போட வேண்டிய அவசியம் இல்லை என்பது, அமைச்சரவை துணைக்குழு உறுப்பினர்களின் கருத்து.ஹூப்பள்ளியில் நடந்த கலவர வழக்கை சட்டத்துக்கு உட்பட்டு வாபஸ் பெறும் முடிவுக்கு அரசு வந்துள்ளது. நீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே வாபஸ் பெறப்படும். இல்லையெனில் இவ்வழக்கு விசாரணை தொடரும்.ஹூப்பள்ளியில் மொத்தமுள்ள 56 வழக்குகளில், 43 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. 43 வழக்குகளில், சிறுபான்மையினர் மட்டுமின்றி, வேறு போராட்டத்தில் மாணவர்கள், விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.