என்.ஆர்.சி.,யில் பதியாவிட்டால் ஆதார் கிடைக்காது: அசாம் அரசு அசாம் அரசு முடிவு
குவஹாத்தி,வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் முயற்சி அதிகரித்துள்ள நிலையில், என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடியுரிமை பதிவேட்டில் பதிவு செய்யாதவர்களுக்கு, ஆதார் வழங்கப்படாது என, அசாம் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.கட்டாயம்அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டு உள்ள குழப்பங்களைத் தொடர்ந்து, அங்கிருந்து அசாமுக்குள் ஊடுருவுவதற்கான முயற்சி அதிகரித்து உள்ளது.இந்நிலையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறிஉள்ளதாவது:அசாமில், என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடியுரிமை பதிவேட்டில் பதிவு செய்வது கட்டாயமாகும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த நடவடிக்கை நடந்து வருகிறது.தற்போது, வங்கதேசத்தில் இருந்து அதிகமானோர் அசாமுக்குள் ஊருடுவ முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கு, நம் ஆதார் போன்ற ஆவணங்கள் கிடைப்பதை தடுக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.இதன்படி, தேசிய குடியுரிமை பதிவேட்டில் பதிவு செய்திருந்தால் மட்டுமே, ஆதார் வழங்கப்படும்.ஆதார் கேட்டு விண்ணப்பிக்கும்போது, அது தொடர்பான தகவல் மாநில அரசுக்கு வழங்கப்படும். அந்த விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.ஆய்வுஆதார் விண்ணப்பங்களை, மாநில அரசின் பொது நிர்வாகத் துறையே இனி கவனிக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு கூடுதல் கலெக்டர், ஆதார் விண்ணப்பங்களை ஆய்வு செய்வார்.இவ்வாறு அவர் கூறினார்.என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்புஅசாமில் நடத்தப்பட்டு, 2019 ஆக., 31ல் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 19 லட்சம் பேர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பை, தேசிய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்!
மாநில அமைச்சரவையின் முடிவை, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமுல் காங்., விமர்சித்துள்ளன.“பி.எம். கிசான் எனப்படும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில், பலர் போலி பெயர்களில் பயனடைவதாக மத்திய அரசே கூறிஉள்ளது. மக்களின் வரிப்பணத்தை, கட்சியினருக்கு பா.ஜ., தாரைவார்த்து வருகிறது. ஆனால், ஆதார் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்,” என, காங்., மூத்த தலைவர் கவுரவ் கோகோய் கூறியுள்ளார். “தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. இந்நிலையில், அதில் பதிவு செய்திருந்தால்தான், ஆதார் வழங்கப்படும் என, எப்படி கூற முடியும்,” என, திரிணமுல் காங்., ராஜ்யசபா எம்.பி., சுஸ்மிதா தாஸ் கூறியுள்ளார்.