கோலார்: கோலார் தொகுதியில், ம.ஜ.த.,வுக்கு பலம் உள்ளதால், பா.ஜ.,விடம் அத்தொகுதியை கேட்டுப் பெற வேண்டுமென, உள்ளூர் தலைவர்கள் விரும்புகின்றனர்.கர்நாடகாவில், பா.ஜ., - ம.ஜ.த., கைகோர்த்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட தயாராகின்றன. தனக்கு செல்வாக்குள்ள சில தொகுதிகளை விட்டுத்தரும்படி, பா.ஜ.,விடம், ம.ஜ.த., கேட்டுள்ளது. இவற்றில் கோலார் தொகுதியும் ஒன்று.பா.ஜ.,வுடன் ஒப்பிட்டால், கோலார் தொகுதியில் ம.ஜ.த.,வுக்கு அதிகமான செல்வாக்கு உள்ளது. தொகுதியில் எஸ்.சி., பிரிவினருக்கு பின், ஒக்கலிகர் சமுதாயத்தினர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. எனவே இந்த தொகுதியை விட்டுத்தரும்படி கேட்டுள்ளனர்.கோலார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, எட்டு சட்டசபை தொகுதிகளில் முல்பாகல், சீனிவாசபுரா, சித்லகட்டா தொகுதிகளில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தங்கவயல், மாலுாரை தவிர, மற்ற தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தனர். எனவே கோலார் லோக்சபா தொகுதியில், உள்ளூர் தலைவருக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெறலாம் என, தலைவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.ஒருவேளை கோலார் தொகுதி, ம.ஜ.த.,வுக்கு கிடைத்தால், முல்பாகல் எம்.எல்.ஏ., மஞ்சுநாத், நிசர்கா நாராயணசாமி, மல்லேஷ் பாபு உட்பட சில தலைவர்களில் ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என, ம.ஜ.த., ஆலோசிக்கிறது.ம.ஜ.த., - எம்.எல்.சி., கோவிந்த ராஜு கூறியதாவது:கோலார் தொகுதியில், யாரை வேட்பாளராக்குவது என்பது குறித்து, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்வர். பா.ஜ., அல்லது ம.ஜ.த., சார்பில் யார் போட்டியிட்டாலும், நாங்கள் நேர்மையான முறையில் பணியாற்றி, வெற்றி பெற வைப்போம்.கோலார் லோக்சபா எல்லையில் உள்ள, மூன்று சட்டசபை தொகுதிகள் எங்கள் கட்சி வசம் உள்ளது. ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்களுடன், எம்.பி.,யும் எங்களுடையவராக இருந்தால், கட்சியை பலப்படுத்த முடியும். தொகுதி வளர்ச்சிக்கு நிதியுதவி கொண்டு வரவும், உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.